தோனியின் கிளவுஸ் சர்ச்சை: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி!

ராணுவ முத்திரை போன்ற அடையாளத்துடன் கூடிய கையுறையை இந்திய வீரர் தோனி அணிந்திருக்க அனுமதி தர வேண்டும் என...
தோனியின் கிளவுஸ் சர்ச்சை: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி!

ராணுவ முத்திரை போன்ற அடையாளத்துடன் கூடிய கையுறையை இந்திய வீரர் தோனி அணிந்திருக்க அனுமதி தர வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால் ஐசிசி அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ முத்திரை போன்ற அடையாளத்துடன் கூடிய பச்சை நிறக் கையுறைகளை அணிந்திருந்தார். 2011-ல் தோனிக்கு ராணுவத்தில் கெளரவ லெப்டினெண்ட் பதவி வழங்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, நாட்டுப்பற்றுடன் ராணுவ முத்திரை கொண்ட கிளவுஸை தோனி அணிந்தார் என்று கூறப்படுகிறது.

எனினும் இந்தக் கையுறை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து தோனியின் கையுறையை அகற்றும்படி ஐசிசி கூறியிருந்தது. 

தோனி அதே கையுறையை உலகக் கோப்பை போட்டியில் அணிவார். அது ராணுவ அடையாளம் இல்லை. இதற்காக ஐசிசி.யிடம் முறையான அனுமதியை பிசிசிஐ கோரியுள்ளது என அதன் சிஓஏ வினோத் ராய் கூறினார். 

ஐசிசி விதிமுறைகளின்படி வர்த்தக, மத அடையாளங்களை வீரர்கள் அணியக்கூடாது. பிசிசிஐ கோரிக்கை தொடர்பாக ஐசிசி கிரிக்கெட் செயலாக்கக் குழு, போட்டி தொழில்நுட்பக் குழு இணைந்து முடிவெடுக்கும். சாதகமாக முடிவு கிடைத்தால் தோனி தொடர்ந்து அதே கையுறையை அணிவார் என்று கூறப்பட்டது. மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, சுரேஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்.பி.சிங் ஆகியோர் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. தோனி இரு ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க விரும்பவில்லை. ஐசிசியின் பதிலை ஏற்றுக்கொள்வதாக நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார். இதனால் இந்த சர்ச்சைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி தனது 2-வது உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை நாளை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com