ரோஹித் சர்மாவிடமிருந்து மட்டும் இரட்டைச் சதத்தை எப்போதும் நாம் எதிர்பார்ப்பது ஏன்?

முதலில் நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா நேரம் செல்லச் செல்ல அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிடுகிறார்...
ரோஹித் சர்மாவிடமிருந்து மட்டும் இரட்டைச் சதத்தை எப்போதும் நாம் எதிர்பார்ப்பது ஏன்?

ஒருநாள் கிரிக்கெட்டில் 24 சதங்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. அதில் மூன்று இரட்டைச் சதங்கள்!

சமீபகாலமாக ரோஹித் சர்மா சதமெடுக்கும் போதெல்லாம் அதிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, ரோஹித் சதமெடுத்தால், உடனடியாக ரசிகர்கள் அவரிடமிருந்து இரட்டைச் சதத்தை எதிர்பார்க்கிறார்கள்.

வேறு எந்த வீரரிடமும் ரசிகர்களுக்கு இந்த எதிர்பார்ப்பு இருப்பதில்லை. 

ஏற்கெனவே, ரோஹித் சர்மா மூன்று இரட்டைச் சதங்களை எடுத்துவிட்டதால் அவரால் இன்னொரு இரட்டைச் சதமெடுப்பது பெரிய விஷயமில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. அதுவே அவர் இரட்டைச் சதங்கள் எடுக்க முக்கியக் காரணம். 

முதலில் நிதானமாக விளையாடும் ரோஹித் சர்மா நேரம் செல்லச் செல்ல அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிடுகிறார். அதுவும் 100 ரன்களை எடுத்துவிட்ட பிறகு உடனடியாக அவர் திருப்தி அடைவதில்லை. அதற்குப் பிறகுதான் அவருடைய ரன் வேட்கை மேலும் அதிகமாகிறது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 125+ ரன்களை எடுத்த வீரர்கள்

19 சச்சின் டெண்டுல்கர்
15 ரோஹித் சர்மா
13 விராட் கோலி
12 கிறிஸ் கெயில்
10 ஜெயசூர்யா

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை இரட்டைச் சதங்கள் எடுத்தவர்கள்

ரோஹி சர்மா - 3
கப்தில் -1
சேவாக் - 1
கெய்ல் - 1
ஃபகார் ஸமான் - 1
சச்சின் - 1

இந்த ஓர் உதாரணம் அவருடைய முயற்சியை அழகாக எடுத்துக்காட்டி விடுகிறது. 100 ரன்கள் எடுத்த பிறகு மேலும் மேலும் ரன்கள் சேர்த்துக்கொண்டே இருக்கிறார். 

ரன் குவிக்கும் வேகம் முதல் 100 ரன்கள் எடுத்தவுடன் அப்படியே எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு மாறிவிடுகிறது. பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்தபோது 100லிருந்து 200 ரன்கள் எடுக்க ரோஹித்துக்கு 42 பந்துகளே தேவைப்பட்டன. கொல்கத்தாவில், இலங்கைக்கு எதிராக 51 பந்துகளில் இரண்டாவது சதத்தை எடுத்தார். மொஹலியில் இன்னும் ஆக்ரோஷம். 36 பந்துகளில்  100லிருந்து 200 ரன்களுக்குத் தாவிவிட்டார். அதாவது 100 ரன்களுக்குப் பிறகு அவருடைய பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 200க்கும் அதிகமாக உயர்ந்துவிடுகிறது.

பிறகு ஏன் ஒவ்வொருமுறையும் ரசிகர்கள் இரட்டைச் சதத்தை எதிர்பார்க்க மாட்டார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com