இங்கிலாந்து மீண்டும் தோல்வி: முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

286 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலிய வேகங்கள் அதிர்ச்சியளித்தது. ஸ்டார்க் மற்றும் பெஹ்ரன்டோஃர்ப் பந்தை ஸ்விங் செய்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தனர். வின்ஸ் (0), ரூட் (8), மார்கன் (4) மற்றும் பேர்ஸ்டோவ் (27) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 

பென் ஸ்டோக்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி, ஆஸ்திரேலிய வேகங்களை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். இவர் சூழ்நிலைக்கேற்ப நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களை உயர்த்தினார். இதனால், பட்லர் மறுபுறம் அடக்கி வாசித்து வந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு நல்ல பாட்னர்ஷிப் அமைப்பு ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளிக்க தொடங்கியது. 

ஆனால், இந்த முக்கியமான கட்டத்தில் 25 ரன்கள் எடுத்திருந்த பட்லர் ஸ்டாய்னிஸ் பந்தில் கவாஜாவின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஸ்டோக்ஸ் உடன் வோக்ஸ் இணைந்தார். இந்த இணையும் நல்ல பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்தது. ஸ்டோக்ஸும் அரைசதம் கடந்து நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 

இந்த இணை துரிதமாக ரன் குவிக்க தொடங்கிய மற்றொரு முக்கியமான கட்டத்தில் மீண்டும் விக்கெட்டை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடி வந்த ஸ்டோக்ஸ் ஸ்டார்கின் துல்லியமான யார்க்கர் பந்தில் போல்டானார். அவர் 89 ரன்கள் எடுத்தார். இந்த விக்கெட் மூலம் இங்கிலாந்தின் நம்பிக்கை தகர்ந்தது. 

அடுத்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவு சோபிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். இதனால், இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பெஹ்ரன்டோஃர்ப் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஸ்டாய்னிஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்த ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

ஆட்டநாயகன் விருதை ஃபின்ச் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com