முதல் பயிற்சி ஆட்டம்: நியூஸிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்
நன்றி: டிவிட்டர்/உலகக் கோப்பை கிரிக்கெட்


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.  

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இன்று நியூஸிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயம் காரணமாக ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

முதலில் களமிறங்கிய இந்திய அணி போல்ட் பந்துவீச்சில் திணறினர். ரோஹித் சர்மா, தவான், ராகுல் ஆகியோர் ஒற்றை இலக்கு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த கோலியும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, பாண்டியா மற்றும் தோனி சிறிய பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். ஆனால், அவர்களும் பெரிதளவு சோபிக்கவில்லை. இதனால், இந்திய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்த நிலையில் களமிறங்கிய ஜடேஜா, ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி ரன் குவித்தார். இதனால், இந்திய அணி 150 ரன்களை கடந்தது. அரைசதம் அடித்த ஜடேஜா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடி வந்த குல்தீப்பும் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், இந்திய அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து சார்பில் அதிகபட்சமாக போல்ட் 4 விக்கெட்டுகளையும், நீஷம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

180 ரன்கள் என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முன்ரோ 4 ரன்களுக்கும், கப்தில் 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த வில்லியம்ஸன், டெய்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. அதனால், இருவரும் அரைசதம் அடித்தனர். 

இந்த நிலையில், வில்லியம்ஸன் 67 ரன்களுக்கு சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து வெற்றிக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 71 ரன்கள் எடுத்திருந்த டெய்லர் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, அந்த அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com