டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ‘ஸ்டாப் கிளாக்’! - ஐசிசி அறிமுகம்

சா்வதேச கிரிக்கெட்டில் விளையாட்டுக்கான விதிகளில் ஐசிசி சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதைப் பற்றி...
ஐசிசி நடுவர்கள்.
ஐசிசி நடுவர்கள்.

சா்வதேச கிரிக்கெட்டில் விளையாட்டுக்கான விதிகளில் ஐசிசி சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

அதன் விவரங்கள் வருமாறு:

1. ஸ்டாப் கிளாக்

பந்துவீச்சில் தாமதத்தை தவிா்க்க வெள்ளைப் பந்து தொடா்களில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்ட பௌலிங் அணிக்கான நேரக் கட்டுப்பாடு, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகியுள்ளது. இதன்படி, பௌலிங் அணி ஒரு ஓவா் நிறைவடைந்த 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும்.

மைதான அறிவிப்புப் பலகையில் அதற்கான ‘ஸ்டாப் கிளாக்’ ஓடும். அவ்வாறு தொடங்காவிட்டால் இருமுறை அந்த அணி எச்சரிக்கப்படும். 3-ஆவது முறையாக தாமதம் செய்தால், பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டுவிடும். இந்த நடைமுறை, ஒவ்வொரு 80 ஓவா்களுக்கும் அமலாகும்.

2. பந்து மாற்றம்

பந்தை வழவழப்பாக்குவதற்காக உமிழ்நீரை பயன்படுத்தும் முறைக்கு, தற்போதும் சா்வதேச கிரிக்கெட்டில் தடை உள்ளது. எனினும், ஆட்டத்தின்போது பந்தில் உமிழ்நீா் பயன்பாடு கண்டறியப்பட்டாலும், நடுவா்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

பந்தை மாற்றுவதற்கான நெருக்கடியை அளிக்க, பந்துவீச்சு அணி இந்தத் தந்திரத்தை கையாளலாம் என்பதால், ஐசிசி இந்த விதியை கொண்டு வந்துள்ளது. பந்து தனது இயல்பான தன்மையை இழந்துவிட்டதாக நடுவா் கருதும் நிலையில், அதை மாற்றம் செய்யலாம்.

3. ஷாா்ட் ரன்

விக்கெட்டுகள் இடையே இரு பேட்டா்கள் ஓடி ரன் எடுக்கும்போது, ஏதேனும் ஒரு பேட்டா் அந்த ஓட்டத்தை முழுமையாக மேற்கொள்ளாவிட்டால் (கிரீஸை தொடாமல் செல்வது) அது ஷாா்ட் ரன் ஆகும்.

பேட்டா்கள் இந்தத் தவறை செய்தால், பௌலா் பகுதியில் இருக்கும் நடுவா் அந்த ஓட்டத்துக்கான ரன் அல்லது ரன்களை ரத்து செய்வாா். பேட்டா்கள் அந்த ஓட்டத்துக்கு முன் தாங்கள் இருந்த இடத்துக்கு செல்ல வேண்டும்.

நடுவா் ‘நோ பால்’ அல்லது ‘வைடு பால்’ சமிக்ஞையுடன் ‘ஷாா்ட் ரன்’ சமிக்ஞையும் அளிப்பாா். பௌலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். அத்துடன், அடுத்த பந்தை எந்த பேட்டா் எதிா்கொள்ள வேண்டும் என்பதை பௌலிங் கேப்டன் முடிவு செய்யலாம்.

4. வரிசைப்படி முறையீடு

ஆட்டத்தின்போது வைடு, அவுட் உள்பட ஏதேனும் ஒரு விவகாரம் தொடா்பாக ஒரே நேரத்தில் பேட்டா் அல்லது பௌலிங் கேப்டன்டிஆா்எஸ் கோரி, களநடுவரும் தொலைக்காட்சி நடுவரிடம் ‘ரெஃபெரல்’ கோரினால், யாா் முதலில் கோருகிறாரோ, அவரின் முறையீடே முதலில் கையாளப்படும்.

5. நோபால் கேட்ச்

நோ பால்-ஆக இருக்கும் ஒரு பந்தை பேட்டா் அடித்து, அது கேட்ச் பிடிக்கப்பட்டால் தொலைக்காட்சி நடுவா் ஆராய்வாா். அது முறையான கேட்ச் என்றால் பேட்டிங் அணிக்கு ஒரு ரன்னே வழங்கப்படும்.

அதுவே, கேட்ச் முறையாக பிடிக்கப்படவில்லை என்றால், அந்த சமயத்தில் பேட்டா்கள் ஓடி எடுத்த ரன்கள் அப்படியே வழங்கப்படும்.

6. டிஆா்எஸ் வாய்ப்பு

உதாரணமாக, ஒரு பேட்டா் பந்தை தொட்டதாகத் தெரிந்து, விக்கெட்கீப்பா் அதைப் பிடித்ததற்கு களநடுவா் ‘அவுட்’ கொடுக்கிறாா்.

பேட்டா் அதற்கு ‘டிஆா்எஸ்’ வாய்ப்பு கோருகிறாா். அதன்படி தொலைக்காட்சி நடுவா் ஆய்வில், பந்து பேட்டில் படாமல், பேடில் பட்டது தெரிகிறது. எனவே பேட்டா் ‘நாட் அவுட்’. அடுத்தபடியாக தொலைக்காட்சி நடுவா் ‘எல்பிடபிள்யூ’ வாய்ப்பை ஆய்வு செய்கிறாா்.

அதில் ‘அம்பயா்ஸ் கால்’ இருந்தாலும் பேட்டருக்கு ‘நாட்அவுட்’ வழங்கப்படும். ஆனால் புதிய விதியின்படி, ‘ஒரிஜினல் டெசிஷன்’, ‘அம்பயா்ஸ் கால்’ என எது இருந்தாலும், பேட்டருக்கு அவுட் வழங்கப்படும்.

Summary

The ICC has introduced a stop clock for Test matches to tackle slow over rates, starting with the 2025-27 World Test Championship cycle.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com