கிரிக்கெட்டில் தோற்றாலும் கால்பந்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து! பெனால்டியில் வென்று காலிறுதிக்குத் தகுதி!

இங்கிலாந்து - கொலம்பியா இடையேயான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி பெனால்டி வரை செல்லும்...
கிரிக்கெட்டில் தோற்றாலும் கால்பந்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து! பெனால்டியில் வென்று காலிறுதிக்குத் தகுதி!

இங்கிலாந்து - கொலம்பியா இடையேயான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி பெனால்டி வரை செல்லும் என எத்தனை பேர் எதிர்பார்த்திருப்பார்கள்?

92 நிமிடங்கள் வரை இந்த நாக் அவுட் சுற்றில் முன்னணியில் இருந்தது இங்கிலாந்து. 57-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி மூலமாக ஹேரி கேன் கோல் அடித்தார்.

இதனால் முதல் 90 நிமிடங்கள் வரை இங்கிலாந்து முன்னணியில் இருந்தது. 5 நிமிடங்கள் கூடுதலாகத் தரப்பட்டன. இதில் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது கொலம்பியா. யெர்ரி மினா அந்த கோலை அடித்தார். 

பிறகு அரை மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கியபிறகும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்கமுடியாமல் போனது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் பரபரப்பான நிமிடங்கள் ஆரம்பமாயின. 

முதல் மூன்று வாய்ப்புகளை கோல்களாக மாற்றியது கொலம்பியா. ஆனால் இங்கிலாந்து தனது மூன்றாவது வாய்ப்பை வீணாக்கியது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. மூன்று வாய்ப்புகளின் முடிவில் கொலம்பியா முன்னணியில் இருந்தது.

ஆனால் கொலம்பிய வீரர் அடுத்த வாய்ப்பை வீணாக்கினார். பிறகு இங்கிலாந்து அடுத்த பெனால்டியைச் சரியாகப் பயன்படுத்த 4 பெனால்டிகளின் முடிவில் இரு அணிகளும் மீண்டும் சமநிலையில் இருந்தன. இதனால் 5-வது வாய்ப்பு வெற்றியை நிர்ணயிப்பதாக அமைந்தது. 

முக்கியமான கட்டத்தில் கொலம்பியாவின் கார்லோஸ் பக்கா அடித்த பெனால்டியை இங்கிலாந்து கோல் கீப்பர் அருமையாகத் தடுத்தார். 

அடுத்ததாக இங்கிலாந்து வீரர் எரிக் டையர் கோல் அடித்தார்.

இதையடுத்து 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியடைந்த இங்கிலாந்து, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் அந்த அணி ஸ்வீடனை எதிர்கொள்கிறது. 

நேற்று இங்கிலாந்து விளையாட்டு ரசிகர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து என இரு முக்கியமான ஆட்டங்கள் இருந்தன. இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு, ராகுலின் சதம் ஆகியவற்றால் தோல்வியடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. எனினும் ஆறுதல் தரும் விதமாக கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி கண்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com