
ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களுக்குப் பதற்றப்பட முடியுமா? இரண்டிலுமே கிட்டத்தட்ட தலை மேல் கத்தி தொங்குகிற நிலைமைதான். நைஜீரியக் கால்பந்து அணி கேப்டன் எப்படி இதைச் சமாளித்தார் என்று யோசிக்கவே முடியவில்லை. யாருக்கும் நேரக்கூடாத உயிரை அறுக்கும் நிமிடங்கள் அவை.
கால்பந்துக் களத்தில் அன்றைய தினம் நைஜீரிய அணி ஒருபோதும் தோற்றுவிடக் கூடாது. ஜூன் 26 அன்று, முதல் சுற்றின் கடைசி ஆட்டம் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரானது. நைஜீரியா 3 புள்ளிகளுடனும் ஆர்ஜென்டீனா 1 புள்ளியுடனும் இருந்தன. இந்த ஆட்டத்தில் நைஜீரியா வெல்ல வேண்டும் என்று கூட அவசியமில்லை. சமன் செய்தாலே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம். அதைவிடவும் இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணி தோற்றுவிட்டால் உலகக் கோப்பையை விட்டு வெளியேற வேண்டியதுதான். இதனால் இந்த ஆட்டத்தை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
போட்டி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நைஜீரிய அணி கேப்டன் ஜான் மைக்கெல் ஒபி, அணி வீரர்களுடன் பேருந்தில் மைதானத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஊரிலிருந்து அவருக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது.
உன் தந்தை மைக்கெல் கடத்தப்பட்டுள்ளார். இதைப் பற்றி வெளியே சொன்னால் அடுத்த நிமிடம் உன் தந்தை கொல்லப்படுவார் எனக் கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். என்ன செய்யலாம் என்று சொல்.
அதுவரை மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா வீரர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த ஜானுக்கு அந்தச் சமயத்தில் தந்தையின் உயிரைப் பற்றி மட்டுமே எண்ணமுடிந்தது.
என்ன செய்யலாம்?
உடனே ஊர் திரும்பி, தந்தையை விடுவிக்க முயற்சி செய்யலாம்.
அல்லது
துயரம், கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இன்றைய ஆட்டத்தில் பங்குபெறலாம். ஆனால் அது முடியுமா என்றும் யோசிக்க வேண்டும். தன்னால் அணிக்குப் பாதிப்புகள் வரக்கூடாது.
இந்த இரு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, தன்னுடைய இந்த நிலையை அணியினரிடம் சொல்லக்கூடாது. அதனால் எவ்விதமான பாதிப்புகளும் தன் தந்தைக்கு நேரலாம். இந்தச் செய்தியே தனக்குத் தெரியாததுபோல இயல்பாக இருக்கவேண்டும்.
யோசித்துப் பாருங்கள். உலகக் கோப்பைப் போட்டியில் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டத்தில் பங்குபெறும் அணியின் கேப்டனுக்கு இப்படியொரு அபாயகரமான நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்?
ஜான் ஒரு பேட்டியில் இதுபற்றிக் கூறியபோது, உணர்வுபூர்வமாக நான் உடைந்துவிட்டேன். என்னால் விளையாட முடியுமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்தேன். குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. கடைசியில் 18 கோடி நைஜீரிய மக்களைக் கைவிட மனமின்றி களத்தில் இறங்கினேன். நாட்டுக்காக எதையும் இழக்கலாம் என்றே என் தந்தை கூறுவார்.
அதிகாரிகளிடமோ அல்லது வேறு யாரிடமும் என் தந்தையைக் கடத்தியது குறித்துச் சொன்னால் உடனே என் தந்தையைச் சுட்டுவிடுவதாக மிரட்டியிருந்தார்கள். எனவே இந்த விவகாரம் குறித்து பயிற்சியாளரிடம் கூட நான் விவாதிக்கவில்லை. என்னுடைய பிரச்னையால் முக்கியமான ஆட்டத்தில் அவருடைய மற்றும் அணி வீரர்களின் கவனம் சிதறக்கூடாது என எண்ணினேன். எந்தளவுக்குப் பயிற்சியாளரிடம் இதுபற்றி விவாதிக்க நினைத்தேனோ, அந்தளவுக்கு என்னால் முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.
மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா. நைஜீரியா போட்டியை விட்டு வெளியேறியது.
ஜானின் தந்தை கடந்த திங்களன்று விடுவிக்கப்பட்டார். இதற்காகக் கடத்தல்காரர்களுக்கு ரூ. 19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் ஜானின் தந்தையைக் கடத்திய கடத்தல்காரர்கள் அவரை மழையில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கவைத்துள்ளார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் ஜானின் தந்தை கடத்தப்படுவது இது முதல்முறையல்ல. 2011-ல் இதுபோல ஒருமுறை கடத்தப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். தெற்கு நைஜீரியாவில் இதுபோல பிரபலங்கள், செல்வந்தர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பணத்துக்காகக் கடத்துவது வழக்கம். பணத்தைக் கொடுத்துவிட்டால் விட்டுவிடுவார்கள்.
நைஜீரியாவில் நிலவும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலைமை அச்சுறுத்துவதாகக் கூறுகிறார் ஜான். இரண்டாவது முறையாக என் தந்தையை இழந்துவிடுவேனோ என்கிற அச்சத்தில் இருந்தேன். இன்று என் தந்தை. நாளை வேறு யாராகவும் இருக்கலாம். இச்சூழல் பயமுறுத்துகிறது. கடத்தியபோது என் தந்தையைத் துன்புறுத்தியதால் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.
இக்கட்டான சமயத்தில் உடனடியாக நாட்டுக்குத் திரும்பாமல், மைதானத்தில் களமிறங்கிய ஜானுக்கு நைஜீரிய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.