ராய் அதிரடி அரைசதம்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராய் அதிரடி அரைசதம்: ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

165 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஜேசன் ராய் மற்றும் ரித்திமான் சாஹா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ராய் அதிரடி காட்ட, ஹைதராபாத்துக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தது.

முதல் 5 ஓவர்களிலேயே அந்த அணி 57 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், 6-வது ஓவரிலேயே சுழற்பந்துவீச்சாளரை அறிமுகப்படுத்தினார். மஹிபால் லோம்ரோரும் சாஹா (18) விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானுக்குப் பெரிய பங்களிப்பைச் செய்தார்.

இதன்பிறகு, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராய் பவுண்டரிகள் விளாசி அரைசதத்தை எட்டினார். இதனால், ஹைதராபாத் வெற்றி எளிதானது போல் தோற்றமளித்தது.

ஆனால், ராய் 60 ரன்களுக்கு சேத்தன் சகாரியா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ப்ரியம் கர்க் முதல் பந்திலேயே முஸ்தபிஸூர் ரஹ்மான பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து, வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அபிஷேக் சர்மாவும் பவுண்டரி சிக்ஸர் அடித்து நம்பிக்கையளித்தார்.

முஸ்தபிஸூர் வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்த வில்லியம்சன் ஹைதராபாத் வெற்றியை உறுதி செய்தார். அதேசமயம், அரைசதத்தையும் எட்டினார்.

18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்த ஹைதராபாத் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன் 41 பந்துகளில் 51 ரன்களும், அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு நடப்பு சீசனில் இது இரண்டாவது வெற்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com