மும்பையை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியுமா?: சென்னையில் நிலைகுலைந்த கொல்கத்தா அணி!

அதன்பிறகு நடந்த திருப்பம் தான் யாரும் எதிர்பாராதது..
மும்பையை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியுமா?: சென்னையில் நிலைகுலைந்த கொல்கத்தா அணி!

ஐபிஎல் போட்டியின் மகத்தான அணியான மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய திறமையை மற்றொரு முறை நிரூபித்துள்ளது. 

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வென்றது. நடப்பு சாம்பியனான மும்பைக்கு நடப்புப் போட்டியில் இது முதல் வெற்றியாகும்.

முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் அடித்தது.

இந்த நிமிடம் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என ரசிகர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். கொல்கத்தா ரசிகர்களால் சிறிது நாளைக்கு இந்த அடியை மறக்க முடியாது. 

இலக்கை விரட்டியபோது 14.5 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. நிதிஷ் ராணா 57, ஷகிப் அல் ஹசன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். கொல்கத்தா அணி வெற்றி பெற 30 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 7 விக்கெட்டுகள் வேறு இருந்ததால் கொல்கத்தா அணி சுலபமாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதன்பிறகு நடந்த திருப்பம் தான் யாரும் எதிர்பாராதது. சென்னை போன்ற ஓர் ஆடுகளத்தில், ரோஹித் சர்மா போன்ற ஒரு வலிமையான கேப்டனின் தலைமையின் கீழ் விளையாடும்போது எந்த ஓர் அதிசயமும் சாத்தியம் என்பது நிரூபணமானது.

15-வது ஓவரின் கடைசிப் பந்தில் அலட்சியமாக மேலேறி வந்த அடிக்க முயன்று 57 ரன்களில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார் ராணா. 

அடுத்த 5 ஓவர்களில் கொல்கத்தா அணியால் ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. அதுவும் நோ பாலுக்குப் பிறகு வீசப்பட்ட பந்து என்பதால் துணிச்சலுடன் அதிரடியான ஷாட்டை வெளிப்படுத்தி பவுண்டரி அடித்தார் ரஸ்ஸல். 

கிருணாள் பாண்டியாவும் பும்ராவும் நான்கு ஓவர்களை அற்புதமாக வீசினார்கள். ரஸ்ஸல் அளித்த இரு கேட்சுகளையும் நழுவவிட்டார்கள்.

கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் ரஸ்ஸலும் தினேஷ் கார்த்திக்கும் இருந்தார்கள். எனினும் அவர்களால் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாமல் போனது. ரஸ்ஸல், கம்மின்ஸ் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்கள்.

கடைசியில் யாரும் எதிர்பாராதவிதத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.

56 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ்
56 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ்

ரோஹித் சர்மாவின் மகத்தான தலைமைப்பண்பை கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். கொல்கத்தா ரசிகர்களிடம் ஷாருக் கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முழுவதுமாக முடிந்த 28 ஆட்டங்களில் 22-ல் மும்பை அணி வெற்றியடைந்துள்ளது. அதிலும் கடந்த 11 ஆட்டங்களில் 10-ல் மும்பைக்கே வெற்றி கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியும் இன்னொரு அணி மீது இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தியதில்லை. 

ஐபிஎல் போட்டியில் மும்பையை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பது சென்னை சேப்பாக்கத்தில் இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com