பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி!


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தன.

சென்னை ஆடுகளத்தில் 205 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி கொல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த கில், கைல் ஜேமிசன் வீசிய 2-வது ஓவரில் ஒரு பவுண்டரியும், அடுத்தடுத்து 2 சிக்ஸர்களும் விளாசினார். அடுத்த பந்திலேயே அவர் டேனியன் கிறிஸ்டியனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, பெரிதளவில் அதிரடி இல்லையென்றாலும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என அடிக்க பவர் பிளேவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் சேர்த்தது. பவர் பிளே கடைசி பந்தில் ராகுல் திரிபாதி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பவர் பிளே முடிந்தவுடன் ராணாவும் 2 பவுண்டரிகள் அடித்து 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அனுபவ தினேஷ் கார்த்திக் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலிடம் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 12-ஐத் தாண்டத் தொடங்கியது. 10 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இருந்தபோதிலும் பெரிதளவில் சிக்ஸர்கள் போகவில்லை. கிளென் மேக்ஸ்வெல் ஓவரைப் பயன்படுத்தி  ஷகிப் அல் ஹசன் 1 சிக்ஸரும், கேப்டன் இயான் மார்கன் 1 சிக்ஸரும் அடித்தனர். ஆனால், அடுத்த ஓவரிலேயே மார்கன் 29 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி 4 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 79 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஷகிப் களத்தில் இருந்தனர்.

சஹால் வீசிய 17-வது ஓவரின் முதல் 4 பந்துகளில் ரஸல் 18 ரன்கள் விளாசி பெங்களூருவுக்கு நெருக்கடியளித்தார். கடைசி 3 ஓவர்களில் 59 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜேமிசன் வீசினார். அந்த ஓவரில் ரஸல் 1 சிக்ஸர் அடித்தாலும், ஷகிப் 26 ரன்களுக்கு போல்டானார். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தாலும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 

கடைசி 2 ஓவர்களில் கொல்கத்தா வெற்றிக்கு 44 ரன்கள் தேவை. ரஸல் மட்டுமே பேட்ஸ்மேன். ஆனால், முகமது சிராஜ் சிறப்பாக வீசியதால் ரஸலால் முதல் 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட முடியவில்லை. ஓடியும் ரன் எடுப்பதைத் தவிர்த்து ஸ்டிரைக்கைத் தன்னிடமே வைத்திருந்தார் ரஸல். கடைசி பந்தில் மட்டுமே 1 ரன் எடுத்தார்.

கடைசி ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே ரஸல் விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்ஷல் படேல். ரஸல் 20 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம், பெங்களூரு 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com