இஷான் கிஷன் நீக்கம்: ரோஹித் சர்மாவின் மற்றொரு அதிர்ச்சி வைத்தியமா?

சிஎஸ்கே அணி ருதுராஜுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது போல மும்பை அணியும் இஷான் கிஷனை....
இஷான் கிஷன் நீக்கம்: ரோஹித் சர்மாவின் மற்றொரு அதிர்ச்சி வைத்தியமா?

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பிரபல வீரர் இஷான் கிஷனை நீக்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

தோனியைப் போலவே ஜார்க்கண்ட் பகுதியிலிருந்து வந்துள்ள மற்றொரு விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்.

22 வயது இஷான், அதிரடி இடதுகை பேட்ஸ்மேன். 2016-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற யு-19 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார். அப்போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது.

17 வயதில் ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்தார். 2016 ஐபிஎல்-லில் இஷான் கிஷனை ரூ. 35 லட்சத்துக்குத் தேர்வு செய்தது குஜராத் அணி. 2018 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 6.20 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ். அந்த ஏலத்தில் இஷான் கிஷனுக்காக ரூ. 2.80 கோடி வரை தரத் தயாராக இருந்தது சிஎஸ்கே. ஆனால் மும்பையும் ஆர்சிபியும் கடுமையாகப் போராடியதில் கடைசியில் பெரிய தொகைக்குத் தேர்வானார். 

2018-ல் 14 ஆட்டங்களில் விளையாடி 275 ரன்கள் எடுத்தார். 2 அரை சதங்கள், 17 சிக்ஸர்கள், ஸ்டிரைக் ரேட் - 149.45. ஆனால் சரியான உடற்தகுதி இல்லை, உடற்பயிற்சிகள் செய்வதில்லை என அவர் மீது புகார்கள் கூறப்பட்டன. மும்பை தலைமைப் பயிற்சியாளர் ஜெயவர்தனேவும் பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங்கும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். எல்லாப் பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்ற முடியாது. ஆட்டத்தில் பக்குவம் வேண்டும் என்றார் ராபின் சிங். 

2019 ஐபிஎல் இஷான் கிஷனுக்குச் சரியாக அமையவில்லை. மும்பை அணி கோப்பையை வென்றபோதும் 7 ஆட்டங்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரை சதமும் எடுக்கவில்லை. இதனால் கடந்த வருட ஐபிஎல்-லின் ஆரம்பத்தில் இஷான் கிஷனுக்கு மும்பை அணி வாய்ப்புகள் தரத் தயங்கியது.

முதல் இரு ஆட்டங்களில் சக ஜார்க்கண்ட் வீரர் செளரப் திவாரிக்கு வாய்ப்பளித்தது. அவரும் ஓரளவு நன்றாகவே விளையாடினார். பிறகு திவாரிக்குக் காயம் ஏற்படவே மீண்டும் மும்பை அணிக்குள் வந்தார் இஷான் கிஷன். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல் ஆட்டத்திலேயே 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். 9 சிக்ஸர்கள். மகிழ்ச்சியுடன் தொடர்ந்து அவரை அணியில் சேர்த்துக்கொண்டார் ரோஹித் சர்மா. 

கெயில், பொலார்ட், டி வில்லியர்ஸ், ரோஹித் சர்மா, தோனி, பாண்டியா, ரிஷப் பந்த் என சிக்ஸர்களுக்குப் பெயர் போன வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் இஷான் கிஷன். 30 சிக்ஸர்கள். 14 ஆட்டங்களில் நான்கு அரை சதங்களுடன் 516 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-ம் இடம். மும்பை அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் இஷான் கிஷன் தான். முதல் இரு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்காத போதும் கிடைத்த வாய்ப்புகள் அசத்தி தன் திறமையை நிரூபித்தார்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார் இஷான் கிஷன். 32 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி, ஆட்ட நாயகன் பட்டத்தையும் வென்றார்.

இந்தியாவுக்காக இரு டி20 ஆட்டங்களில் விளையாடிய இஷான் கிஷன், இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் உற்சாகமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஒருமுறை கூட அவர் 30 ரன்களைத் தொடவில்லை. 28, 1, 12, 26, 6 என 5 ஆட்டங்களிலும் மோசமாகவே விளையாடினார்.

எனினும் சிஎஸ்கே அணி ருதுராஜுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது போல மும்பை அணியும் இஷான் கிஷனைக் கைவிடாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷனுக்குப் பதிலாக நாதன் கோல்டர் நைலைத் தேர்வு செய்துள்ளார் ரோஹித் சர்மா. காயம் காரணமாக இஷான் கிஷன் விளையாடாமல் உள்ளாரா என்பது பற்றி ரோஹித் எதுவும் கூறவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றே அறியப்படுகிறது.

இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த காலங்களில் சரியாக விளையாடதபோது தனது தவறைத் திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார் இஷான் கிஷன். அதேபோல அவர் மீண்டும் நன்கு விளையாட அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடந்த வருடம் இஷான் கிஷனுக்குப் பதிலாக செளரப் திவாரியைத் தேர்வு செய்ததால் தான் அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு மீண்டும் வாய்ப்பு கிடைத்தபோது அசத்தினார் இஷான் கிஷன். அதேபோல இம்முறையும் ரோஹித் சர்மா இந்த இளம் வீரருக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துப் பார்க்கிறாரா என்றும் எண்ணத் தோன்றுகிறது. எப்படியும் மீண்டும் விளையாடாமல் இருக்கப்போவதில்லை. ரோஹித் சர்மா இன்னொரு வாய்ப்பளிக்காமல் இருக்கப்போவதில்லை. அப்போது புது இஷான் கிஷனை நாம் காண வாய்ப்பிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com