முழு உடற்தகுதி அடைந்து, ஐபிஎல் போட்டியில் விளையாட பிரபல வீரர் தயார்

தில்லி அணியின் கேப்டன் பதவி பற்றி எனக்குத் தெரியாது. அந்த முடிவு அணியின் உரிமையாளர்களின் கையில் உள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி
தில்லி கேபிடல்ஸ் அணி

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியின் முதற்பகுதியில் விளையாடாமல் இருந்த தில்லி அணி வீரர் ஷ்ரேயஸ் ஐயர், முழு உடற்தகுதியடைந்துள்ளார். 

ஐபிஎல் போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்தில் தோள்பட்டைக் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஷ்ரேயஸ் ஐயர். 

இந்நிலையில் தற்போது முழுவதும் குணமாகியுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதமியில் நடைபெற்ற உடற்தகுதிப் பரிசோதனையில் கலந்துகொண்டார். அதில் அவர் தேர்ச்சியடைந்தார். இதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லி அணி, ஷ்ரேயஸ் தலைமையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது.  இந்த வருடம் அந்த அணி ரிஷப் பந்த் தலைமையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தற்போது, ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் அணியில் இடம்பெறவுள்ளதால் தில்லி கேபிடல்ஸின் கேப்டனாக யார் செயல்படப்போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலைமை பற்றி சமீபத்தில் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டியளித்ததாவது:

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன். தில்லி அணியின் கேப்டன் பதவி பற்றி எனக்குத் தெரியாது. அந்த முடிவு அணியின் உரிமையாளர்களின் கையில் உள்ளது. தில்லி அணி நன்றாக விளையாடி முன்னிலையில் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். இதுவரை ஐபிஎல் கோப்பையை தில்லி அணி கைப்பற்றவில்லை. அதை நிறைவேற்றுவதே என் லட்சியம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com