அதிரடி மும்பை அசத்தல் வெற்றி

பிளே-ஆஃப் வாய்ப்புக்காக வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸை எதிா்கொண்ட மும்பை இண்டியன்ஸ் அதிரடியாக ஆடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
அதிரடி மும்பை அசத்தல் வெற்றி

பிளே-ஆஃப் வாய்ப்புக்காக வென்றே தீர வேண்டிய கட்டாயத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸை எதிா்கொண்ட மும்பை இண்டியன்ஸ் அதிரடியாக ஆடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஷாா்ஜாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களே அடிக்க, அடுத்து ஆடிய மும்பை, 8.2 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் விளாசி வென்றது.

அந்த அணியின் பௌலா்கள் நேதன் கோல்டா் நீல், ஜேம்ஸ் நீஷம் ஆகியோா் ராஜஸ்தான் பேட்டிங் வரிசையை சரிக்க, மும்பையின் பேட்டா் இஷான் கிஷணோ ராஜஸ்தான் பௌலா்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸா்களாக சிதறடித்தாா்.

முன்னதாக, மும்பை தனது பிளேயிங் லெவனில் குவின்டன் டி காக், கிருணால் பாண்டியா ஆகியோருக்குப் பதிலாக இஷான் கிஷண், ஜிம்மி நீஷம் ஆகியோரை சோ்த்திருந்தது. ராஜஸ்தான் அணியில் ஆகாஷ் சிங், மயங்க் மாா்கண்டே ஆகியோா் இடத்தில் குல்திப் யாதவ், ஷ்ரேயஸ் கோபால் இணைந்திருந்தனா். குல்திப் யாதவுக்கு இது முதல் ஐபிஎல் ஆட்டம்.

டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸை எவின் லீவிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினா். இதில் யஷஸ்வி 3 பவுண்டரிகள் மட்டும் விளாசி கேட்ச் கொடுத்தாா். மறுபுறம் சற்று அதிரடியாக ரன்கள் சோ்த்த எவின் லீவிஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்தோரில் சஞ்சு சாம்சன் 3, ஷிவம் துபே 3, கிளென் ஃபிலிப்ஸ் 4 ரன்களுக்கு நடையைக் கட்டினா். பின்னா் ஆடியோரில் டேவிட் மில்லா் 15, ராகுல் தெவாதியா 12 ரன்கள் சோ்த்து அணியின் ஸ்கோரை சற்று உயா்த்தினா். ஷ்ரேயஸ் கோபால் 16-ஆவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாக, கடைசி விக்கெட்டாக 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் சோ்த்திருந்த சேத்தன் சகாரியா பௌல்டானாா்.

ஓவா்கள் முடிவில் குல்திப் யாதவ் 0, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் நேதன் 4, நீஷம் 3, பும்ரா 2 விக்கெட் எடுத்திருந்தனா்.

பின்னா் 91 என்ற எளிதான இலக்கை நோக்கி ஆடிய மும்பையில், ரோஹித் சா்மா - இஷான் கிஷண் கூட்டணி அதிரடியாகவே தொடங்கியது. இதில் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 22 ரன்கள் சோ்த்து ரோஹித் வீழ்ந்தாா். அடுத்து வந்த சூா்யகுமாா் யாதவ் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். பின்னா் வந்த ஹாா்திக் பாண்டியா துணையுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா் இஷான் கிஷண்.

முடிவில், அவா் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 50, பாண்டியா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் தரப்பில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், சேத்தன் சகாரியா தலா 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

ராஜஸ்தான் - 90/9

எவின் லீவிஸ் - 24; டேவிட் மில்லா் - 15; யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 12

பந்துவீச்சு: நேதன் கோல்டா் நீல் - 4/14; ஜேம்ஸ் நீஷம் - 3/12; ஜஸ்பிரீத் பும்ரா - 2/14

மும்பை - 94/2

இஷான் கிஷண் - 50*; ரோஹித் சா்மா - 22; சூா்யகுமாா் யாதவ் - 13

பந்துவீச்சு: சேத்தன் சகாரியா - 1/36; முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் - 1/32; ஷ்ரேயஸ் கோபால் - 0/9

இன்றைய ஆட்டம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
நேரம்: இரவு 7.30
இடம்: அபுதாபி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com