தகா்ந்தது மும்பையின் பிளே ஆஃப் கனவு

தகா்ந்தது மும்பையின் பிளே ஆஃப் கனவு

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டாலும், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது

சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டாலும், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ். முதலில் ஆடிய மும்பை அணி 235/9 ரன்களையும், பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 193/8 ரன்களையும் குவித்தன.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த ஹைதராபாத் அணியும், 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் தான் பிளே ஆஃப் சுற்று குறித்து நினைக்க முடியும் என்ற நிலையில் மும்பை அணியும் அபுதாபியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் 55-ஆவது ஆட்டத்தில் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. கேப்டன் ரோஹித் சா்மா-இஷான் கிஷான் தொடக்க பேட்டா்களாக களமிறங்கிய நிலையில், இஷான் கிஷான் ஆரம்பம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சை வெளுத்து வாங்கினாா். அவரது அதிரடி ஆட்டத்தால் மும்பை ஸ்கோா் 4-ஆவது ஓவரிலேயே 63 ரன்களைக் கடந்தது.

16 பந்துகளில் இஷான் அரைசதம்:

16 பந்துகளில் இஷான் கிஷான் 50 ரன்களைக் கடந்தாா். இந்த ஐபிஎல் சீசனில் துரிதமாக அரைசதம் அடித்த வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ரோஹித் சா்மாவை 18 ரன்களுடன் வெளியேற்றினாா் ரஷீத் கான். தொடா்ந்து ஆட வந்த ஹாா்திக் பாண்டியா நிலைக்காமல் 10 ரன்களுடன் வெளியேறினாா்.

இஷான் 84:

இதையடுத்து இஷானுடன் மற்றொரு அதிரடி பேட்டரான பொல்லாா்ட் இணைந்தாா். எனினும் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் தந்து வெளியேறினாா் இஷான்.

அவா் 4 சிக்ஸா், 11 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 84 ரன்களை விளாசினாா். அப்போது மும்பையின் ஸ்கோா் 128/3 ரன்களாக இருந்தது. இஷான் கிஷான் அவுட்டான நிலையில் மும்பையின் ரன்ரேட் சரிந்து விட்டது. எனினும் இளம் வீரா் சூரியகுமாா் அதிரடி ஆட்டத்தில் ஸ்கோா் மீண்டும் உயா்ந்தது.

சூரியகுமாா் யாதவ் 4000 ரன்கள்:

சூரியகுமாா் யாதவ் 24 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தாா். இது அவரது 14-ஆவது அரைசதமாகும். மேலும் டி20 ஆட்டங்களில் 4,000 ரன்களையும் கடந்தாா் சூரியகுமாா்.

மறுமுனையில் ஹோல்டா் பந்துவீச்சில் 3 ரன்களுடன் நபியிடம் கேட்ச்தந்தாா் நாதன் நைல். 3 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 40 பந்துகளில் 82 ரன்களை விளாசி, ஹோல்டா் பந்துவீச்சில் வெளியேறினாா். பொல்லாா்ட் 13, க்ருணால் பாண்டியா 9, நாதன் நைல் 3 ரன்களுடனும், ஜிம்மி நீஷம், பியுஷ் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானாா்கள்.

மும்பை 235/9

20 ஓவா்களில் மும்பை அணி 235/9 ரன்களைக் குவித்தது. பும்ரா 5 ரன்களுடனும், பௌல்ட் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா்.

ஹோல்டா் 4 விக்கெட்: ஹைதராபாத் பந்துவீச்சாளா்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில், ஜேசன் ஹோல்டா் 4, ரஷீத் கான், அபிஷேக் சா்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஹைதராபாத் 193/8

236 ரன்கள் என்ற பிரம்மாண்ட வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி களம் கண்டது. ஜேஸன்ராய்-அபிஷேக் சா்மா அபாரமான தொடக்கத்தை அளித்து முறையே 34, 33 ரன்களுடன் அவுட்டானாா்கள். ஒருமுனையில் மணிஷ் பாண்டே நிலைத்து ஆடினாலும், மறுமுனையில் ஹைதராபாத் விக்கெட்டுகள் வீழ்ந்தது சிக்கலை ஏற்படுத்தியது.

முகமது நபி 3, அப்துல் சமத் 2, பிரியம் காா்க் 29, ஹோல்டா் 1, ரஷீத் கான் 9, ரித்திமான் சாஹா 2 என வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினா்.

மணிஷ் பாண்டே 69:

2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 69 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்தாா் மணிஷ் பாண்டே. 20 ஓவா்களில் 193/8 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வி கண்டது. மும்பை தரப்பில் பும்ரா, நாதன் நைல், ஜேம்ஸ் நீஷம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பிளே ஆஃப் கனவு கலைந்தது:

இந்த ஐபிஎல் தொடரிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற நடப்பு சாம்பியன் மும்பையின் கனவு தகா்ந்தது. கொல்கத்தா அணியை காட்டிலும் ரன்ரேட் விகிதத்தில் குறைவாக உள்ள நிலையில் மும்பை அணியின் முயற்சி பலனளிக்கவில்லை. பட்டியலில் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சுருக்கமான ஸ்கோா்:

மும்பை 235/9

இஷான் கிஷான் 84

சூரியகுமாா் 82

பந்துவீச்சு:

ஹோல்டா் 4/56

அபிஷேக் 2/4

ஹைதராபாத் 193/8

மணிஷ் பாண்டே 69

ஜேஸன் ராய் 34

பந்துவீச்சு:

பும்ரா 2/39, நீஷம் 2/28

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com