அற்புதமாகப் பந்துவீசி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் உமேஷ் யாதவ்

இந்திய அணிக்காக இதுவரை 7 சர்வதேச டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.
அற்புதமாகப் பந்துவீசி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் உமேஷ் யாதவ்

ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு உமேஷ் யாதவ் ஒரு பேட்டியில், வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்றார். ஏதோ வழக்கமான பேட்டியென வாசகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் சொன்னதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் உமேஷ் யாதவ்.

மும்பையில் நடைபெற்ற பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 18.2 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பனுகா 9 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஸ்ஸல் 31 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் 2022 போட்டியில் 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் உமேஷ் யாதவ். 

பஞ்சாப் அணி என்றால் உமேஷ் யாதவுக்கு எப்படி இருக்குமோ? அந்த அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகள் எடுத்து வருகிறார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக 6 முறை ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார் உமேஷ் யாதவ். வேறு எந்த வீரரும் ஒரு அணிக்கு எதிராக இத்தனை ஆட்ட நாயகன் விருதுகளை வென்றது கிடையாது.

மேலும் ஐபிஎல் போட்டியில் மொத்தமாக 10 ஆட்ட நாயகன் விருதுகளை உமேஷ் யாதவ் வென்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இல்லை.

டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர், உமேஷ் யாதவ் தான். 

33 - உமேஷ் யாதவ் v பஞ்சாப்
30 - அமித் மிஷ்ரா v ராஜஸ்தான்
27 - ஹர்பஜன் சிங் v ஆர்சிபி

பவர்பிளேயில் விக்கெட்டுகள் எடுக்கும் திறமை உமேஷ் யாதவிடம் உள்ளதால் இந்த ஐபிஎல் போட்டிக்குப் பிறகு இந்திய டி20 அணிக்குத் தேர்வாகி டி20 கிரிக்கெட்டிலும் உமேஷ் யாதவ் சாதிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 34 வயது உமேஷ் யாதவ், 2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் இதுவரை 7 சர்வதேச டி20 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். 2019-க்குப் பிறகு இந்திய அணிக்காக அவர் விளையாடியதில்லை. இந்த வருடம் நிலைமை மாறும் என்பது தற்போது உறுதியாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com