முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக், குல்தீப் சென் அபாரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 39-ஆவது ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு
முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்: ரியான் பராக், குல்தீப் சென் அபாரம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடர் 39-ஆவது ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி தடுமாறி 144/8 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் புணேயில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பெளலிங்கை தேர்வு செய்தது.
 ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி: இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
 தொடக்க பேட்டர் தேவ்தத் படிக்கல் 7, அஸ்வின் ரவிச்சந்திரன் 17, ஜோஸ் பட்லர் 8 ரன்களுக்கு ஹேஸல்வுட் பந்தில் வெளியேற ராஜஸ்தான் 33/3 ரன்களுடன் தடுமாறியது.
 கேப்டன் சஞ்சு சாம்சனும், டேரில் மிட்செலும் இணைந்து ஸ்கோரை உயர்த்த முயன்ற நிலையில் சாம்சன் 3 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 27 ரன்களை விளாசி, ஹஸரங்க பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் 16, ஷிம்ரன் ஹெட்மயர் 3, டிரென்ட் பெளல்ட் 5, பிரசித் கிருஷ்ணா 5 என சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
 ரியான் பராக் அதிரடி 50: மறுமுனையில் நிலைத்து ஆடிய இளம் வீரர் ரியான் பராக் அபாரமாக ஆடி 31 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 56 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 144/8 ரன்களைச் சேர்த்தது.
 பெங்களூரு தரப்பில் முகமது சிராஜ் 2/30, ஹேஸல்வுட் 2/19, ஹஸரங்கா 2/23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 பெங்களூரு தோல்வி 115 ஆல் அவுட்: 145 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களால், ராஜஸ்தான் அணியின் பெளலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 23, ரஜத் 16, ஷபாஸ் அகமது 17, ஹஸரங்கா 18 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை எடுத்தனர். விராட் கோலி உள்பட ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன்களை எடுத்து வெளியேறினர்.
 19.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு.
 குல்தீப் சென்-அஸ்வின் அபாரம்: ராஜஸ்தான் அணியில் இளம் வீரர் குல்தீப் சென் 4/20, அஸ்வின் 3/17 ஆகியோர் அற்புதமாக பந்துவீசினர்.
 பெங்களூரை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.


 இன்றைய ஆட்டம்
 குஜராத்
 ஹைதராபாத்
 இரவு 7.30 மணி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com