ஜடேஜாவுடன் புதிய பயணத்தில் சிஎஸ்கே: பழையன கழிதலும் புதியன புகுதலும்!

ஒரே நாளில் ஜடேஜாவால் மாற்றம் செய்துவிட முடியாது. ஆனால் காலப்போக்கில் அவர் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. 
ஜடேஜாவுடன் புதிய பயணத்தில் சிஎஸ்கே: பழையன கழிதலும் புதியன புகுதலும்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய அத்தியாயம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

2008 முதல் தோனியின் நிழலில் அவருடைய பேரும் புகழில் செழித்து வளர்ந்து வந்த சிஎஸ்கேவுக்கு இனி அந்த செளகரியம் கிடையாது. கேப்டன் பதவியிலிருந்து விலகி அந்தப் பொறுப்பை ஜடேஜாவிடம் வழங்கியுள்ளார் தோனி. இந்த வருடம் வீரராக விளையாடவுள்ளார். அடுத்த வருடம் விளையாடுவாரா என்பது தெரியாது.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது பழைய யோசனைகள், திட்டங்கள் எல்லாம் ஜடேஜா காலத்திலும் செயல்படுத்துமா அல்லது புதிய திட்டங்களுடன் சிஎஸ்கே புதிய அடையாளத்தை நோக்கிப் பயணிக்குமா என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. 

தோனிக்கென்று சில பாணிகள் உண்டு. இளம் வீரர்களை விடவும் மூத்த வீரர்களையே அதிகம் நம்புவார். ஏலத்தில் கூட 30 வயதுக்கு அதிகமானவர்களாகப் பார்த்து பார்த்துத் தேர்வு செய்வார். இன்னொன்று, ஒருவரை நம்பிவிட்டால் அவ்வளவு சீக்கிரம் கைவிட மாட்டார். 2020 ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்கு 7-ம் இடம் தான் கிடைத்தது. அதற்கு ஒரு முக்கியக் காரணம், சரியாக விளையாடாத வீரர்களை உடனே கைவிடாமல் தொடர்ந்து வாய்ப்புகள் அளித்தார். அந்த நம்பிக்கையை வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனினும் தோனி தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இவர்கள் தான் இதற்கு முன்பு சிஎஸ்கே அணி நன்றாக விளையாடியதற்குக் காரணம் என்று தன் முடிவுக்கு விளக்கம் அளித்தார். வாட்சன் தொடர்ந்து பல ஆட்டங்களில் மோசமாக விளையாடியபோதும் அவரை அணியிலிருந்து நீக்காமல் வாய்ப்பு தந்தார். அதன் பலனையும் பிறகு அனுபவித்தார். அணியில் 25 வீரர்கள் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் குறைவான வீரர்களுக்கே வாய்ப்புகள் அளிக்கப்படும். இதனால் பாபா அபரஜித், சாய் கிஷோர் போன்ற இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியில் கடைசி வரையில் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. பாப அபரஜித் இப்போது எந்த அணியிலும் இல்லை. சாய் கிஷோர் அணி மாறிவிட்டார். சிஎஸ்கே அணியில் இடம்பிடிப்பது பெருமைக்குரியதாக இளம் வீரர்களுக்கு இருக்கலாம். ஆனால் வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடைக்கும் எனச் சொல்லிவிட முடியாது. கடைசிவரை வலைப்பயிற்சியில் மட்டுமே விளையாடி போட்டியை முடித்துக்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்படலாம். 

அதேபோல புள்ளிவிவரங்களை ஒரேடியாக நம்பாமல் அந்த நேரத்தில் என்ன யோசிக்கிறாரோ அதைச் செயல்படுத்துவது தோனியின் பாணி. 2010 இறுதிச்சுற்றில் பொலார்டைக் காலி செய்ய மிட் ஆஃப்பில் நேராக ஹேடனை நிற்கவைத்து நினைத்ததைச் சாதித்தார். ஒருமுறை தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோருக்கு முன்பு ஹர்பஜன் சிங், தீபக் சஹாரை பேட்டிங்கில் களமிறக்கி எதிரணியைத் திணற வைத்தார். இப்படி தோனியின் வியூகங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தோனி அணியில் இருக்கும்போது ஒரேடியாக தோனியின் திட்டங்களுக்கு எதிராகப் புது யோசனைகளைச் செயல்படுத்துவது கடினம். உதாரணமாக மூத்த வீரர்களைத் தேர்வு செய்வது, மோசமாக விளையாடினாலும் வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிப்பது போன்றவை சிஎஸ்கே, தோனியின் பாணி. அதை ஒரே நாளில் ஜடேஜாவால் மாற்றம் செய்துவிட முடியாது. ஆனால் காலப்போக்கில் அவர் செய்யவேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. 

மும்பை அணியின் சில திட்டங்களை சிஎஸ்கேவிலும் செயல்படுத்திப் பார்க்கலாம். பொலார்ட் தேர்வு, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற வீரர்களை உற்சாகப்படுத்தி அவர்களை இந்திய அணி வரைக்கும் கொண்டு சென்றது, பொலார்ட், மலிங்கா, ஆர்ச்சர் போன்ற பிரபல வீரர்களை எப்பாடுபட்டாவது அணிக்குத் தேர்வு செய்து பலப்படுத்தியது, அதனாலேயே 5 கோப்பைகளைப் பெற்று நெ.1 அணியாக விளங்குவது என மும்பை அணிக்கென்று சில அடையாளங்களும் தனித்துவங்களும் உண்டு. அந்த யோசனைகளை சிஎஸ்கேவிலும் செயல்படுத்திப் பார்க்கலாம். இன்னொன்று ஏலத்தில் செலவழிக்க சிஎஸ்கே பெரிதும் தயங்கும். இதனால் நல்ல வீரர்கள் பலர் சிஎஸ்கே பக்கமே வந்ததில்லை. அந்த நிலையை மாற்றலாம். உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடிய வீரர்களைத் தேர்வு செய்தாலும் அணியில் வாய்ப்பளிக்கத் தயங்கக் கூடாது. நாம் மற்ற அணியில் இருந்திருந்தால் நிச்சயம் வாய்ப்புகள் கிடைத்திருக்குமே என்று அவர்கள் எண்ணும் அளவுக்கு நிலைமை போகக்கூடாது. உதாரணமாக நடராஜன், சன்ரைசர்ஸில் இடம்பெறாமல் சிஎஸ்கேவில் இருந்திருந்தால் அவரால் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க முடியுமா? சன்ரைசர்ஸ் வழங்கிய வாய்ப்புகள் எல்லாம் சிஎஸ்கேவிலும் கிடைத்திருக்குமா? 

சிஎஸ்கே அணியில் விளையாட தமிழக வீரர்களுக்கு அவ்வளவு ஆசை. ஆனால் அவர்களைச் சீந்துவதில்லை சிஎஸ்கே. ஆர். அஸ்வின், முரளி விஜய் போன்றோரே பல வருடங்களுக்கு சிஎஸ்கேவில் விளையாடியுள்ளார்கள். தமிழகத்தின் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கானை எல்லாம் இதர அணிகள் கொத்திக்கொண்டு போக அனுமதித்திருக்கக் கூடாது.

என் வழி தனி வழி என ஜடேஜா பயணிப்பது தான் தோனியிடமிருந்து அவர் கற்ற பாடங்களுக்கு மரியாதை அளிப்பதாக இருக்கும். சிஎஸ்கேவுக்கும் புதிய அடையாளம் கிடைக்கும். புதிய பயணம் என்பது எப்போது உற்சாகம் அளிக்கக் கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com