அக்‌ஷருடன் சிரித்துப் பேசியபடி விளையாடினேன்: மும்பையைத் தோற்கடித்த தில்லி அணியின் லலித் யாதவ்

விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என இருவரும் பேசிக்கொண்டோம்.
அக்‌ஷருடன் சிரித்துப் பேசியபடி விளையாடினேன்: மும்பையைத் தோற்கடித்த தில்லி அணியின் லலித் யாதவ்

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய தில்லி அணி இலக்கை அருமையாக விரட்டியது. 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 104 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் லலித் யாதவும் அக்‌ஷர் படேலும் அருமையான கூட்டணியை அமைத்தார்கள். லலித் யாதவ் 48 ரன்களும் அக்‌ஷர் படேல் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பசில் தம்பி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அபார வெற்றிக்குப் பிறகு தில்லி அணியின் லலித் யாதவ் கூறியதாவது:

அணிக்கு என்ன தேவையோ அதன்படி தான் விளையாடினேன். முடிந்தவரை கடைசி ஓவர் வரைக்கும் ஆட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்தேன். கடைசியில் 19-வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட்டோம். அக்‌ஷர் படேலுடன் விளையாடுவது மிகவும் செளகரியமாக இருக்கும். என்னிடமிருந்து சிறந்த ஆட்டத்திறனை அவர் கொண்டு வருவார். மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என இருவரும் பேசிக்கொண்டோம். என்ன தோன்றுகிறதோ அதன்படி விளையாடு. கடைசி வரைக்கும் ஆட்டத்தைக் கொண்டு செல் என கேப்டன் ரிஷப் பந்த் கூறினார். அதை மனத்தில் வைத்துக்கொண்டு விளையாடினேன். வேறு எதுவும் நினைக்கவில்லை. ஏனெனில் ஆடுகளத்தில் நானும் அக்‌ஷர் படேலும் சிரித்துப் பேசிக்கொண்டு தான் விளையாடினோம். உங்களுக்குத் தெரிந்த ஒரு நபருடன் விளையாடும்போது இந்த மனநிலை மிகவும் உதவும் என்றார்.

லலித் யாதவ்
லலித் யாதவ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com