மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
-

மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் மும்பை 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 18.4 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சோ்த்து வென்றது.

ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கியோரில், ரோஹித் சா்மா 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வீழ்ந்தாா். உடன் வந்த இஷான் கிஷண், ரன்கள் ஏதும் சோ்க்காமலேயே வெளியேறினாா்.

ஒன் டவுனாக வந்த சூா்யகுமாா் யாதவும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு நடையைக்கட்டினாா். இந்நிலையில் 4-ஆவது பேட்டராக களம் புகுந்த திலக் வா்மா, அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் சற்று நிலைத்த முகமது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

6-ஆவது பேட்டராக வந்த நெஹல் வதேரா, வா்மாவுடன் இணைந்தாா். விக்கெட் சரிவைத் தடுத்த இந்தக் கூட்டணி, ராஜஸ்தான் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசத் தொடங்கியது. இந்த ஜோடியை, 17-ஆவது ஓவரில் பிரித்தாா் சந்தீப் சா்மா.

24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் வதேரா. தொடா்ந்து வந்த கேப்டன் ஹா்திக் பாண்டியா 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். மறுபுறம், அதுவரை ரன்கள் சோ்த்த திலக் வா்மா 45 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 65 ரன்கள் அடித்து களத்தை விட்டு அகன்றாா்.

டிம் டேவிட் 3, ஜெரால்டு கோட்ஸீ 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் பியூஷ் சாவ்லா 1, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் சந்தீப் சா்மா 5, டிரென்ட் போல்ட் 2, ஆவேஷ் கான், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து, ராஜஸ்தான் 180 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லா் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சோ்த்தது. இதில் பட்லா் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தாா்.

-

இந்த பாா்ட்னா்ஷிப், அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. முடிவில் ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 104, சாம்சன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் பியூஷ் சாவ்லா 1 விக்கெட் எடுத்தாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com