ஐபிஎல்: ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பெங்களூரு!

பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல்: ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பெங்களூரு!
படம் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எக்ஸ் தளப் பதிவு

நடப்பு ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் திடலில் நடைபெற்றது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல்(ஏப்.25) போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஹைதராபாத் அணியை முதலில் பந்துவீச அழைத்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், பாப் டு பிளஸ்ஸிஸ் 12 பந்துகளில் 1 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களை விளாசினார். மறுபுறம் நிதானம் காட்டிய விராட் கோலி 43 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும், நடுவரிசை வீரராக களமிறங்கிய ரஜத் படிதார் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுக்க, அவருக்கு பக்கபலமாக கேமரூன் கிரீன் சிக்ஸர் 37 ரன்கள் எடுத்து கைகொடுக்க அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் திரட்டியது.

இதையடுத்து, 207 ரன்கள் வெற்றி இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

தொடக்கவீரராக களம் கண்ட அபிஷேக் ஷர்மா அதிரடியில் இறங்கினார். அவர் 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்திருந்த போது, யாஷ் தயால் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அடுத்து களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வரிசையாக நடையைக் கட்ட, கேப்டன் பேட் கம்மின்ஸுடன், ஷாபாஸ் அகமது கைகோர்த்து அணியை வெற்றிபெறச் செய்ய போராடினர்.

இதனால் 13 ஓவர்களில் ஹைதராபாத் அணி 124 ரன்கள் திரட்டியது. இந்நிலையில், அதிரடி காட்டிய பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்திருந்த போது, கிரீன் பந்துவீச்சில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் ஹைதராபாத் அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. இதையடுத்து, ஷாபாஸ் அகமது தனியொருவனாக அணியை கரைசேர்க்க போராடினார்.

இந்த நிலையில், 2 விக்கெட்டுகள் மட்டுமே கைவசமிருந்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் 44 ரன்கள் தேவைப்பட்டது. இதன்மூலம், 19வது ஓவரின் முடிவிலேயே பெங்களூரு அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஷாபாஸ் அகமது 37 பந்துகளில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடர் வெற்றிகளுக்கு, அதன் சொந்த மண்ணிலேயே முற்றுப்புள்ளி வைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com