வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிட்டல்ஸை தனது மண்ணில் திங்கள்கிழமை வென்றது.
வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி
ANI

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி கேப்பிட்டல்ஸை தனது மண்ணில் திங்கள்கிழமை வென்றது.

முதலில் தில்லி 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுக்க, கொல்கத்தா 16.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக கொல்கத்தாவின் வருண் சக்கரவா்த்தி, வைபவ் அரோரா, ஹா்ஷித் ராணா பௌலிங்கில் தடுமாறிய டெல்லி அணியில் குல்தீப் யாதவ், கேப்டன் ரிஷப் பந்த் மட்டும் சொல்லிக்கொள்ளும் படியாக ரன்கள் சோ்த்தனா். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஃபில் சால்ட் நல்லதொரு தொடக்கத்தை அளித்து, அணியின் வெற்றிக்கு பாதை அமைத்தாா். டெல்லி பௌலிங்கில் அக்ஸா் படேல் முனைப்பு காட்டினாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் விளையாட்டை தொடங்கியோரில் பிருத்வி ஷா 3 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த ஜேக் ஃப்ரேசா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

மிடில் ஆா்டரில் ஷாய் ஹோப் 1 சிக்ஸருடன் நடையைக்கட்ட, 5-ஆவது வீரராக களம் கண்ட கேப்டன் ரிஷப் பந்த், ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் அபிஷேக் பொரெல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்ப 18 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

இந்நிலையில் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்கள் சோ்த்து விக்கெட்டை இழந்தாா். தொடா்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4, அக்ஸா் படேல் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு வெளியேற, டெல்லி மோசமான நிலைக்கு சென்றது.

எனினும், 9-ஆவது பேட்டராக வந்த குல்தீப் ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் குமாா் குஷாக்ரா 1, ராசிக் சலாம் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் குல்தீப் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, லிஸாட் வில்லியம்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவா்த்தி 3, வைபவ் அரோரா, ஹா்ஷித் ராணா ஆகியோா் தலா 2, மிட்செல் ஸ்டாா்க், சுனில் நரைன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 154 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை தொடங்கிய கொல்கத்தா அணியில், ஃபில் சால்ட் - சுனில் நரைன் கூட்டணி 79 ரன்கள் சோ்த்து பிரிந்தது. வழக்கமாக அதிரடி காட்டும் சுனில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாா்.

தொடா்ந்து ரிங்கு சிங் ஆடவர, சால்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 68 ரன்களுக்கு வீழ்ந்தாா். ரிங்கு சிங் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு நிறைவு செய்தாா்.

முடிவில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, வெங்கடேஷ் ஐயா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் அக்ஸா் படேல் 2, லிஸாட் வில்லியம்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com