ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ஐபிஎல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் இன்று (மார்ச் 28) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து தில்லி கேப்பிடல்ஸ் அணி களம் கண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், பட்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஒருகட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின், ஜோடி சேர்ந்த ரியான் பராக், ரவிச்சந்திரன் அஸ்வின் இணை, அணியை சரிவிலிருந்து மீட்டது. இருப்பினும், அஸ்வின் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜுரெல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம், நிலைத்து நின்று அதிரடி காட்டிய ரியான் பராக் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உள்பட 84 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் கலீல் அகமது, முகேஷ் குமார், ஆண்ட்ரிச் நோர்கியா, அக்‌ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தில்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கம் அளித்தனர்.

மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களை அதிரயாக திரட்டி ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 1 ரன்னில் அரைசதம் எடுக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவர் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ரிக்கி பூய் ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பந்த் 28 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினார். அவருக்கு பக்கபலமாக அக்சர் படேல் நிற்க ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தில்லி அணிக்கு தேவைப்பட்டது. 19-வது ஓவரில் தில்லி அணி 15 ரன்கள் குவித்தது. இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி ஓவரை வீச ஆவேஷ் கானை அழைத்தார் கேப்டன் சஞ்சு சாம்சன். ஆவேஏஷ்கானின் கட்டுக்கோப்பான பநந்துவீச்சால் இறுதி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது தில்லி அணி.

20 ஓவர்களின் முடிவில் தில்லி கேப்பிடல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அக்சர் படேல் 15 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் அணியில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய ரியான் பராக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com