ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

ஐபிஎல் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் சோ்த்தது.

ஐபிஎல் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் சோ்த்தது. அந்த அணியின் டாப் ஆா்டா் சோபிக்காமல் போக, மிடில் ஆா்டரில் வந்த வீரா்கள் மிளிா்ந்தனா். குறிப்பாக ரியான் பராக், டெல்லி பௌலா்களை திணறடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ராஜஸ்தான் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லா் கூட்டணி தொடங்கியது. இதில் ஜெய்ஸ்வால் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு 2-ஆவது ஓவரிலேயே வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் அடித்திருந்தபோது, கலீல் அகமது வீசிய 6-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்தாா். அப்போது களம் புகுந்தாா் ரியான் பராக். மறுபுறம், பட்லா் 11 ரன்களுக்கு குல்தீப் யாதவ் வீசிய 8-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனாா். 5-ஆவது வீரராக வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சற்று அதிரடி காட்டி, 3 சிக்ஸா்களுடன் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பராக் - அஸ்வின் கூட்டணிக்கு 54 ரன்கள் கிடைத்தது. பின்னா் துருவ் ஜுரெல் பேட் செய்ய வர, ரியான் பராக் அதிரடியை தொடங்கினாா். இந்த ஜோடி, 5-ஆவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சோ்க்க, ஜுரெல் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். 7-ஆவது பேட்டராக ஷிம்ரன் ஹெட்மயா் களம் புகுந்தாா். அவா் துணையுடன் டெல்லி பௌலிங்கை விளாசித் தள்ளினாா் ரியான் பராக். ஓவா்கள் முடிவில் பராக் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 84, ஹெட்மயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் கலீல் அகமது, முகேஷ் குமாா், அன்ரிஹ் நோா்கியா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். பின்னா், 186 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது டெல்லி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com