ஐபிஎல்: பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அபாரம்

ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல்: பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அபாரம்
படம் | ஐபிஎல் எக்ஸ் தளம்

ஐபிஎல் தொடரில் பெங்களூரில் இன்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி களம் கண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரீன் மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தியது. இருப்பினும்,கேமரூன் கிரீன் 33 ரன்களில் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் (28 ரன்கள்), ரஜத் படிதார் (3 ரன்கள்) மற்றும் அனூஜ் ராவத் (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஹர்சித் ராணா மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுனில் நரைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் சால்ட் 30 ரன்களும், சுனில் நரைன் 47 ரன்களும் அதிரடியாய் விளாச அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 6.3 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்திருந்த போது, சுனில் நரைன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அரைசதம் விளாச, கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் 16.5 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com