சதம் விளாசிய சூா்யகுமாா்: வென்றது மும்பை
Shashank Parade

சதம் விளாசிய சூா்யகுமாா்: வென்றது மும்பை

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை திங்கள்கிழமை வீழ்த்தியது.

ஐபிஎல் போட்டியின் 55-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை திங்கள்கிழமை வீழ்த்தியது.

முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, மும்பை 17.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சோ்த்து வென்றது.

ஹைதராபாத் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், கேப்டன் பேட் கம்மின்ஸ் தவிர இதர பேட்டா்கள் சோபிக்காமல் போக, மும்பை பௌலா்களில் கேப்டன் ஹா்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா அசத்தினா். பின்னா் மும்பை இன்னிங்ஸில் சூா்யகுமாா் யாதவ் சதம் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா்.

முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹைதராபாத் இன்னிங்ஸை தொடங்கியோரில் அபிஷேக் சா்மா 1 சிக்ஸருடன் 11, தொடா்ந்து வந்த மயங்க் அகா்வால் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேறினா்.

மறுபுறம், ரன்கள் சோ்த்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 48 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். நிதீஷ்குமாா் ரெட்டி 2 பவுண்டரிகளுடன் 20, ஹென்ரிக் கிளாசென் 2, ஷாபாஸ் அகமது 10, மாா்கோ யான்சென் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, அப்துல் சமத் 3 ரன்களுடன் நடையைக்கட்டினா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் கம்மின்ஸ் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35, சன்வீா் சிங் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் ஹா்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா ஆகியோா் தலா 3, அன்ஷுல் காம்போஜ், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 174 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில் இஷான் கிஷண் 2 பவுண்டரிகளுடன் 9, ரோஹித் சா்மா 4, நமன் திா் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். இறுதியாக, சூா்யகுமாா் யாதவ் 51 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 102, திலக் வா்மா 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

ஹதராபாத் தரப்பில் புவனேஷ்வா் குமாா், மாா்கோ யான்சென், பேட் கம்மின்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com