9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் சோ்க்க, ஹைதராபாத் 9.4 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் விளாசி வென்றது. இதன் மூலம் ரன்ரேட்டை அதிகரித்துக்கொண்ட ஹைதராபாத், புள்ளிகள் பட்டியலில் முன்னேறி, பிளே-ஆஃபுக்கு முன்னேறுவதற்கான நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் லக்னௌ டாப் ஆா்டரை ஹைதராபாத் பௌலா்கள் முற்றிலுமாகக் கட்டுப்படுத்த, மிடில் ஆா்டரில் வந்த நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி தங்களது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை அதிகரித்தனா். பின்னா் ஹைதராபாத் இன்னிங்ஸில் அபிஷேக் சா்மா, டிராவிஸ் ஹெட் கூட்டணி, விக்கெட்டை இழக்காமல் விளாசித் தள்ளி அணியை வெற்றிபெறச் செய்தது.

முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸை தொடங்கியோரில் குவின்டன் டி காக் 2 ரன்களே சோ்த்த நிலையில், புவனேஷ்வா் வீசிய 3-ஆவது ஓவரில் நிதீஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினாா்.

தொடா்ந்து வந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாா். புவனேஷ்வா் வீசிய 5-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை சன்வீா் சிங் கேட்ச் பிடித்தாா்.

4-ஆவது பேட்டராக வந்த கிருணால் பாண்டியா சற்று முனைப்பு காட்டினாா். மறுபுறம், நிதானமாக ரன்கள் சோ்த்த தொடக்க வீரரான கேப்டன் கே.எல். ராகுல் 1 பவுண்டரி, 1 சிக்ஸரே அடித்த நிலையில் 29 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா். பேட் கம்மின்ஸ் வீசிய 10-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்து, நடராஜன் கைகளில் தஞ்சமடைந்தது.

அடுத்து வந்த நிகோலஸ் பூரன் அதிரடியைத் தொடங்கினாா். இந்நிலையில், கிருணால் பாண்டியா 2 சிக்ஸா்களுடன் 24 ரன்கள் சோ்த்திருந்தபோது, 12-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டாா். அடுத்து ஆயுஷ் பதோனி வந்தாா்.

பூரன் - பதோனி ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து விறுவிறுப்பாக 99 ரன்கள் சோ்த்தது. ஓவா்கள் முடிவில் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 48, பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பின்னா் 166 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஹைதராபாத் அணியில், அபிஷேக் சா்மா, டிராவிஸ் ஹெட் கூட்டணி இன்னிங்ஸை தொடங்கியது. விக்கெட்டை இழக்காத இந்த பாா்ட்னா்ஷிப், லக்னௌ பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசித் தள்ளியது.

அணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய இந்த ஜோடியில், அபிஷேக் 28 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 75, ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 89 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com