ஃபீல்டிங்கில் அசத்தி பவுண்டரியைத் தடுத்த தாய்லாந்து வீராங்கனை: ஆச்சர்யத்தில் கிரிக்கெட் உலகம்

இப்படி கூட ஃபீல்டிங் செய்து அசத்த முடியுமா...
IPL / Screengrab
IPL / Screengrab

இப்படி கூட ஃபீல்டிங் செய்து அசத்த முடியுமா என கிரிக்கெட் உலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தாய்லாந்து வீராங்கனை நட்டகன் சந்தம். 

மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் டிரெயில் பிளேஸர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

ஷார்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி  ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த டிரெயில் பிளேஸர்ஸ் அணியில் தொடக்க வீராங்கனை தியேந்திரா டாட்டின் 20 ரன்களில் வெளியேறியபோதும், மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்தார். எனினும் எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறியதால், அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதையடுத்து 119 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இதன்மூலம் ஹாட்ரிக் பட்டம் வெல்லும்  வாய்ப்பை இழந்தது சூப்பர் நோவாஸ்.

இந்த ஆட்டத்தில் தான் டிரெயில் பிளேஸர்ஸ் அணியைச் சேர்ந்த நட்டகன் சந்தம் அற்புதமான ஃபீல்டிங் திறமையால் கிரிக்கெட் உலகை பிரமிப்பூட்டியுள்ளார்.

ரோட்ரிகஸ் அடித்த ஷாட், பேட்டின் முனையில் பட்டு பவுண்டரிக்குச் செல்ல பார்த்தது. அப்போது பந்தைத் துரத்திச் சென்ற 24 வயது நட்டகன், பந்து எல்லைக் கோட்டுக்கு அருகில் சென்றபோது உடனடியாகப் பாய்ந்து சென்று தடுத்து அதே வேகத்தில் எல்லைக்கோட்டின் வெளியே விழுந்தார். ஆனால் பந்து எல்லைக் கோட்டைத் தொடவில்லை. இதனால் அவரால் வெற்றிகரமாக பவுண்டரியைத் தடுக்க முடிந்தது. 

இதன் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது முதல் அதிகமான பாராட்டுகளை எதிர்கொண்டு வருகிறார் நட்டகன். 

ஃபீல்டிங்குக்குப் புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ் கூட இதுபோன்ற ஒரு ஃபீல்டிங் திறமையை வெளிப்படுத்தியதில்லை என கிரிக்கெட் உலகம் நட்டகனைப் புகழ்ந்துகொண்டிருக்கிறது. பலரும் நட்டகனிடம் கழுத்து பரவாயில்லையா என விசாரித்துள்ளார்கள். அதற்குப் பதில் அளித்துள்ள நட்டகன், என்னுடைய கழுத்து பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். கழுத்து வலி இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com