ஐபிஎல்: கோப்பையை வெல்வது யார்? மும்பை-டெல்லி இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸூம், முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸூம் செவ்வாய்க்கிழமை (நவ. 10) மோதுகின்றன.
ஐபிஎல்: கோப்பையை வெல்வது யார்? மும்பை-டெல்லி இன்று பலப்பரீட்சை


துபை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸூம், முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸூம் செவ்வாய்க்கிழமை (நவ. 10) மோதுகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி ஐபிஎல் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற நிலையில், 5-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லியை சந்திக்கிறது. அதேநேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி இந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்குகிறது.

பலம் வாய்ந்த அணியான மும்பை இந்த சீசனில் இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடி, அதில் 10-இல் வென்றுள்ளது. மேலும், மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததோடு, முதல் தகுதிச் சுற்றில் டெல்லியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிச் சுற்றை உறுதி செய்தது. அதேநேரத்தில் டெல்லி அணி இந்த சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடி 9-இல் வெற்றி கண்டுள்ளது. எனினும் கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதால், அந்த அணி மிகுந்த நம்பிக்கையோடு மும்பையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, குவின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, கிரண் போலார்ட் என பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் இருப்பது மும்பைக்கு கூடுதல் பலமாகும். இவர்களில் ஒருவர் களத்தில் நின்றுவிட்டாலும், அந்த அணி வலுவான ஸ்கோரை குவித்துவிடும். கடந்த ஆட்டங்களில் அபாரமாக ஆடி ரன் குவித்துள்ள மும்பை அணி, டெல்லிக்கு எதிராகவும் பெரிய அளவில் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணியின் பந்துவீச்சைப் பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா-டிரென்ட் போல்ட் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. இந்த சீசனில் பும்ரா, போல்ட் ஆகிய இருவரும் சேர்ந்து 

49 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளர். எனவே, இந்தக் கூட்டணி டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

இதுவரை... 
இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 15 ஆட்டங்களிலும், டெல்லி 12 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. 

இந்த சீசனில் இரு லீக் ஆட்டங்கள், முதல் தகுதிச் சுற்று என 3 ஆட்டங்களில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. அந்த மூன்றிலும் மும்பை வெற்றி 
கண்டது. 

எனவே, இறுதிச் சுற்றில் மும்பையின் ஆதிக்கம் தொடருமா அல்லது மும்பைக்கு டெல்லி பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த ஆட்டத்தின்போது டிரென்ட் போல்டுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவேளை காயத்திலிருந்து டிரென்ட் போல்ட் மீளாவிட்டால், அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் பட்டின்சன் இடம்பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் ராகுல் சாஹர், கிருணால் பாண்டியா கூட்டணி மும்பைக்கு பலம் சேர்க்கிறது.

டெல்லி அணியில் ஷிகர் தவன், மார்கஸ் ஸ்டோனிஸ், அஜிங்க்ய ரஹானே, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஷிம்ரோன் ஹெட்மயர், ரிஷப் பந்த் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனினும் இவர்களில் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

கடந்த ஆட்டத்தில் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ததால் ஹைதராபாதை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது டெல்லி.  எனவே, ஷிகர் தவன் உள்ளிட்ட முன்னணி பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பொருத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். ரிஷப் பந்த் ரன் எடுக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருவது கவலையளிக்கிறது. வேகப்பந்து வீச்சில் ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே கூட்டணியும், சுழற்பந்துவீச்சில் அஸ்வின், அக்ஷர் படேல் கூட்டணியும் டெல்லிக்கு பலம் சேர்க்கிறது.

உத்தேச லெவன்
மும்பை
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், குவின்டன் டி காக், 
சூர்யகுமார் யாதவ், 
கிருணால் பாண்டியா, 
ஹார்திக் பாண்டியா, 
கிரண் போலார்ட், 
நாதன் கோல்ட்டர் நைல், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட்/
ஜேம்ஸ் பட்டின்சன். 

டெல்லி
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்),
ஷிகர் தவன்,
ரிஷப் பந்த், 
மார்கஸ் ஸ்டோனிஸ், 
அஜிங்க்ய ரஹானே,  
ஷிம்ரோன் ஹெட்மயர், 
அக்ஷர் படேல், பிரவீண் துபே, அஸ்வின்/ஹர்ஷல் படேல், 
அன்ரிச் நோர்ட்ஜே, 
ககிசோ ரபாடா. 

போட்டி நேரம்: இரவு 7.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com