ஷார்ஜாவில் மீண்டும் ரன் மழை: தில்லி 228 ரன்கள் குவிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தில்லி தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். மைதானத்தின் அளவைப் பயன்படுத்தி இருவரும் தொடக்கம் முதலே துரிதமாக பவுண்டரிகள் அடித்து ரன் எடுத்து வந்தனர்.

சுனில் நரைன் ஓவரைப் பயன்படுத்தியும் பலனில்லை. அவரது ஓவரிலும் தவன் 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார்.

இந்த சீசனில் சிறப்பாக பந்துவீசி வந்த வருண் சக்கரவர்த்தி பவர் பிளேவின் கடைசி ஓவரில் தவான் விக்கெட்டைக் கைப்பற்றினார். தவான் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, பிரித்வி ஷாவுடன் இணைந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் அதிரடியைத் தொடங்கினார். இதனிடையே பிரித்வி ஷாவும் 35-வது பந்தில் அரைசத்தை எட்டினார்.

இதனால், ரன் ரேட்  உயர்ந்து ஓவருக்கு 10-ஐத் தாண்டியது. இந்த நிலையில் பிரித்வி ஷா நாகர்கோடி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 41 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் பவுண்டரிகள் அடிக்க சற்று நேரம் எடுத்துக்கொள்ள ஷ்ரேயஸ் பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை நன்கு கடைப்பிடித்து வந்தார். அவரும் 26-வது பந்தில் அரைசதத்தை எட்ட, பந்தும் அதிரடியில் இணைந்தார்.  இதனால், அணியின் ரன் ரேட் ஓவருக்கு 11-ஐத் தொட்டது.

இந்த நிலையில் ரஸல் பந்தில் ஆட்டமிழந்தார் பந்த். அவர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். எனினும் ஷ்ரேயஸ் தொடர்ந்து அதிரடி காண்பித்து வந்தார். இவருடன் இணைந்த ஸ்டாய்னிஸ்  1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய ஹெத்மயர் ஒரு சிக்ஸர் அடித்து 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் ஸ்டிரைக் கிடைக்காத ஷ்ரேயஸ் 38 பந்துகளில் 88 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணித் தரப்பில் ரஸல் 2 விக்கெட்டுகளையும், நாகர்கோடி மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com