ராகுல் தெவாதியா - ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரம்!

ராஜஸ்தானின் மூன்று வெற்றிகளிலும் அதிக அளவில் பங்களித்து நட்சத்திரமாக மாறியிருக்கிறார் ராகுல் தெவாதியா.
ராகுல் தெவாதியா - ஐபிஎல் போட்டியின் புதிய நட்சத்திரம்!


இந்த வருட ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானின் மூன்று வெற்றிகளிலும் அதிக அளவில் பங்களித்து நட்சத்திரமாக மாறியிருக்கிறார் ராகுல் தெவாதியா. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

கடந்த 4 ஆட்டங்களில் தொடா்ந்து தோல்வி கண்ட ராஜஸ்தானுக்கு இது 3-வது வெற்றி. ஹைதராபாத்துக்கு 4-வது தோல்வி.

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.5 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்டமிழக்காமல் 45 ரன்களுடன் ராஜஸ்தான் வெற்றிக்கு வழிவகுத்த ராகுல் தெவாதியா ஆட்டநாயகன் ஆனாா்.

ராஜஸ்தான் அணி ஜெயிக்க 20 ஓவர்களில் 159 ரன்கள் தேவை என்கிற நிலையில் 15.5 ஓவர்களின்போது ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் தான் எடுத்திருந்தது. அடுத்த 25 பந்துகளில் 60 ரன்கள் தேவை. களத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ராகுல் தெவாதியாவும் ரியான் பராக்கும் இருந்தார்கள். ரஷித் கான், நடராஜன் வசம் தலா ஒரு ஓவர் மீதம் இருந்தன. இதனால் ராஜஸ்தான் அணி ஜெயிப்பது கடினம் என்றே ரசிகர்கள் எண்ணினார்கள். மேலும் ராகுல் தெவாதியாவால் இன்னொரு முறை அதிரடியாக விளையாட முடியுமா என்கிற கேள்வியும் எழுந்தது.

ஆனால் இரு வீரர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினார்கள். சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் 18 ரன்கள் எடுத்தார்கள். ரஷித் கான் வீசிய அடுத்த ஓவரில் தெவாதியா தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். நடராஜன் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றி பெற 8 ரன்கள் தான் தேவைப்பட்டது. ஒரு பந்தை மீதம் வைத்து அட்டகாசமான வெற்றியைக் கண்டது ராஜஸ்தான் அணி. தெவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும் ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

2014 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ராகுல் தெவாதியா முதல்முறையாக ஆட்ட நாயகன் விருதை நேற்று பெற்றார். இது அவருடைய 27-வது ஐபிஎல் ஆட்டம். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடிய 7 ஆட்டங்களில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ராஜஸ்தான் அணி. இந்த மூன்றிலும் ராகுல் தெவாதியாவின் பங்களிப்பு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது.

ராஜஸ்தான் அணியின் மூன்று வெற்றிகளிலும் ராகுல் தெவாதியாவின் பங்களிப்பு

3/37 vs சிஎஸ்கே
53 (31) vs பஞ்சாப் (ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள்)
45* (28) vs ஹைதராபாத்

இதனால் ராகுல் தெவாதியை இந்திய அணியில் காண வேண்டும் என்று ரசிகர்கள் கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். ஹரியாணாவைச் சேர்ந்த 27 வயது தெவாதியா அதிரடி பேட்ஸ்மேனாகவும் லெக் ஸ்பின்னராகவும் உள்ளதால் ஒரு ஆல்ரவுண்டராக அவரால் சாதிக்க முடியும் என அவர் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. கனவுகள் பலிக்கட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com