சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எல்லாமே பாம்பே தான்: ஸ்ரீகாந்த் சாடல்

ஹர்ஷா போக்ளேவுக்கு பாம்பேவைத் தவிர எதுவும் தெரியாது. நடுநிலையுடன் இல்லாததுதான் அவர்களுடைய பிரச்னை.
சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு எல்லாமே பாம்பே தான்: ஸ்ரீகாந்த் சாடல்


ஆஸ்திரேலிய தொடரில் விளையாடவுள்ள (டி20 தொடா், ஒரு நாள் தொடா், டெஸ்ட் தொடா்) இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள், டி20 அணிகளின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியிலும் ராகுலுக்கு இடம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் கே.எல். ராகுலை டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்துள்ளதை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்துள்ளார். ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைக் கொண்டு டெஸ்ட் ஆட்டத்துக்குத் தேர்வு செய்வது தவறான முன்னுதாரணம். முக்கியமாக, கடைசி சில டெஸ்டுகளில் அவர் சரியாக விளையாடாத நிலையில். தேர்வாகும் வீரர் ஜெயிக்கிறாரா தோற்கிறாரா என்பது முக்கியமில்லை. இதுபோன்ற தேர்வுகள் ரஞ்சி வீரர்களை ஊக்கம் இழக்கச் செய்யும் என்றார்.

டெஸ்ட் அணிக்கு ராகுலைத் தேர்வு செய்ததற்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு எதிராக அவர் பேசியதாவது:

சஞ்சய் மஞ்ச்ரேக்கரை விடுங்கள், அவருக்கு வேறு வேலையில்லை. சர்ச்சை ஏற்படுத்துவதற்காக ஒரு கருத்தைத் தெரிவிக்கக்கூடாது. எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ராகுல் நன்றாக விளையாடியுள்ளார். மஞ்ச்ரேக்கர் பேசுவதெல்லாம் அபத்தம். அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகி, சதமும் அடித்துள்ளார் ராகுல். வேகப்பந்துவீச்சை நன்கு எதிர்கொள்வார். 

பாம்பேவைத் தாண்டி மஞ்ச்ரேக்கரால் யோசிக்க முடியாது. அதுதான் பிரச்னை. நாம் நடுநிலையாகப் பேசுகிறோம். மஞ்ச்ரேக்கர் போன்றவர்களுக்கு எல்லாமே பாம்பே பாம்பே பாம்பே தான். அதைத் தாண்டி அவர்களால் யோசிக்க முடியாது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நன்றாக விளையாடித்தான் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். ஹர்ஷா போக்ளேவுக்கு பாம்பேவைத் தவிர எதுவும் தெரியாது. நடுநிலையுடன் இல்லாததுதான் அவர்களுடைய பிரச்னை. நாங்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக்குக்காகப் பேசவில்லை. (பாம்பேவைச் சேர்ந்த) சூர்ய குமார் யாதவை ஏன் சேர்க்கவில்லை என்றுதான் கேட்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com