2 பந்துகளில் 27 ரன்கள்: சிஎஸ்கே ரசிகர்களைக் கதறச் செய்த என்கிடியின் 20-வது ஓவர்!

அப்போது தான் அந்தப் பயங்கரம் நடந்தது...
2 பந்துகளில் 27 ரன்கள்: சிஎஸ்கே ரசிகர்களைக் கதறச் செய்த என்கிடியின் 20-வது ஓவர்!

6 6 7நோபால் 7நோபால் 1வைட் 0 1 1 1

இதை நன்குக் கவனியுங்கள். 2 பந்துகளில் 27 ரன்கள்!

ஐபிஎல் போட்டியில் இதற்கு முன்னால் இப்படியொரு நிலை எந்தவொரு பந்துவீச்சாளருக்கும் ஏற்படவில்லை. ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி தோற்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது என்கிடி வீசிய 20-வது ஓவர்.

24 வயது லுங்கிசானி என்கிடி தென் ஆப்பிரிக்க அணிக்காக 5 டெஸ்ட், 26 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

2018 ஐபிஎல் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார். 7 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகள் எடுத்தார். எகானமி - 6.00. கடந்த வருடம் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. இதனால் இந்தமுறை அணியில் ஹேஸில்வுட் போன்ற திறமையான பந்துவீச்சாளர் இருந்தும் என்கிடிக்கு வாய்ப்பளித்தார் தோனி. முதல் ஆட்டத்தில் நிறைய ரன்கள் கொடுத்தாலும் பிற்பகுதியில் நன்கு பந்துவீசினார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடினார். 

முதல் 10 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. அதன்பின்பு சென்னை அணி வீரர்கள் ஓரளவுக்கு நன்கு பந்துவீசினார்கள். அடிக்கடி விக்கெட்டுகள் விழுந்தன. இதனால் 15-வது ஓவரின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான். 19-வது ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. கடைசியில், 200 ரன்கள் எடுத்தால் கூட சமாளித்து விடலாம் என தோனி எண்ணியிருப்பார். அப்போது தான் அந்தப் பயங்கரம் நடந்தது.

பொறுப்புடன் பந்துவீசுவார் என என்கிடிக்கு 20-வது ஓவரை வீசும் வாய்ப்பை அளித்தார் தோனி. முதல் பந்தை ஆர்ச்சர் சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்தும் சிக்ஸருக்குப் போனபோது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வயிறு லேசாகக் கலங்கியது. எனினும் அடுத்து நடக்கவிருந்த பேராபத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அடுத்த பந்தை நோ பாலாக வீசினார் என்கிடி. மறுபடியும் சிக்ஸர் அடித்தார் ஆர்ச்சர். ப்ரீ ஹிட் பந்து அடுத்தது.

அதையும் நோ பாலாக வீச, மீண்டும் சிக்ஸர் அடித்தார் ஆர்ச்சர். நொந்து போனார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.

அடுத்த பந்து வைடாகச் சென்றது. ஆக, 2 பந்துகளில் 27 ரன்களைக் கொடுத்து சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்கு இருந்த சிறிய வாய்ப்பையும் பாழடித்தார் என்கிடி. நல்லவேளையாகக் கடைசி 4 பந்துகளில் 3 ரன்களை மட்டும் கொடுத்தார். எனினும் முதல் 2 பந்துகளிலேயே நஷ்டத்தை உண்டு பண்ணிவிட்டதால் கடைசி 4 பந்துகளில் நன்கு பந்துவீசியதால் எந்தவொரு நன்மையும் ஏற்படவில்லை.

நோ பால்கள் இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று தோனியும் பிறகு பேட்டியளித்தார். 

20-வது ஓவரில் என்கிடி வீசிய முதல் இரு பந்துகளை சிஎஸ்கே ரசிகர்களால் என்றைக்கும் மறக்கவே முடியாது.

ஐபிஎல் போட்டியில் 20-வது ஓவரில் அதிக ரன்கள் கொடுத்தவர்கள்

30 ரன்கள் - டிண்டா, ஆர்பிஎஸ் v மும்பை, 2017
30 ரன்கள் - ஜார்டன், பஞ்சாப் v தில்லி, 2020
30 ரன்கள் - என்கிடி, சிஎஸ்கே v ராஜஸ்தான், 2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com