மியாண்டட், சச்சின், ராகுல் தெவாதியா: ஷார்ஜா மைதானத்தின் வரலாற்றுத் தருணங்கள்!

30 ரன்களை தெவாதியா எடுத்தபோது கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் திகைத்தது...
மியாண்டட், சச்சின், ராகுல் தெவாதியா: ஷார்ஜா மைதானத்தின் வரலாற்றுத் தருணங்கள்!

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஓர் அனுபவத்தைத் தந்துவிட்டார் ராகுல் தெவாதியா. 

ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப், 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 19.3 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வென்றது.

9-வது ஓவரின் முடிவில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ராகுல் தெவாதியா 4-ம் நிலை வீரராகக் களமிறங்கினார். இடது கை பேட்ஸ்மேன் என்பதால் லெக் ஸ்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர் அனுப்பப்பட்டார். 

224 ரன்கள் என்கிற இலக்கை விரட்டும் முயற்சியில் இருந்தபோது ஆரம்பக்கட்டத்தில் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினார் தெவாதியா. முதல் 19 பந்துகளில் அவரால் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இதனால் ராஜஸ்தான் ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். தெவாதியா ஆடுகளத்தில் தடுமாறியது அவருடைய முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அணி வீரர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார்கள். 

மேக்ஸ்வெல் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன் பிறகு லாங் ஆஃப்பில் பந்தைத் தட்டிவிட்ட பிறகு சிங்கிள் ரன் ஓட மறுத்தார். தெவாதியா பேட்டிங் செய்ய வந்தால் பந்துகளை வீணடிப்பார் என அவர் நினைத்தார். இதனால் தெவாதியா மேலும் அவமானப்படுத்தப்பட்டார். 

17-வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. 18 பந்துகளில் 51 ரன்கள் தேவை. ஆடுகளத்தில் தெவாதியா இன்னும் இருந்ததால் நம்பிக்கை இழந்தார்கள் ராஜஸ்தான் அணி ரசிகர்கள்.

ஆனால் விளையாட்டின் அழகே, நாம் எண்ணிப் பார்க்க முடியாததைக் களத்தில் வீரர்கள் சாதித்துக்காட்டுவதுதானே! அதுதான் அதன்பிறகு நடந்தது. பாட்ஷா படம் பார்த்தபோது என்ன உணர்ந்தார்களோ அந்த அனுபவம் ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது.

காட்ரெல் வீசிய அந்த ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்கள் அடித்தார் தெவாதியா. 6-வது பந்திலும் மற்றொரு சிக்ஸர். 5 சிக்ஸர்களுடன் அந்த ஓவரில் 30 ரன்களை தெவாதியா எடுத்தபோது கிரிக்கெட் உலகம் நம்பமுடியாமல் திகைத்தது. பிறகு ஷமி பந்துவீச்சில் இன்னொரு சிக்ஸர் அடித்து மொத்தமாக 7 சிக்ஸர்களுடன் 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் தெவாதியா. கடைசியில் வெற்றிக்கனியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

ஷார்ஜாவில் மியாண்டட், சச்சின் அடித்த சிக்ஸர்களுக்கு வரலாறு உண்டு. அந்த வரலாற்றுத் தருணங்களில் ராகுல் தெவாதியாவும் இணைந்துவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com