வாழ்த்துகள் நடராஜன், ஆஸ்திரேலியாவில் உங்களைச் சந்திக்கிறேன்: டேவிட் வார்னர்

நட்டுவுக்குப் (நடராஜன்) பாராட்டுகள். உங்களை ஆஸ்திரேலியாவில் சந்திக்கிறேன்...
வாழ்த்துகள் நடராஜன், ஆஸ்திரேலியாவில் உங்களைச் சந்திக்கிறேன்: டேவிட் வார்னர்

இந்திய டி20 அணியில் தமிழக வீரர் டி. நடராஜன் தேர்வானதற்கு ஆஸி. தொடக்க வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு நேராக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் இந்திய வீரர்கள். ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகியுள்ளார். இதனால் தமிழக வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன் இந்திய டி20 அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

2017-ல் தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. அடுத்த வருடம் சன்ரைசர்ஸ் அணி ரூ. 40 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மிகச் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி அனைவர் கவனத்தையும் கவர்ந்தார் நடராஜன்.

ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.02. 

யார்க்கர் பந்தை வீசுவது மிகவும் கடினம் என அனைவரும் எண்ணுகிற நிலையில் அதில் நிபுணத்துவம் பெற்றுள்ள நடராஜனின் பந்துவீச்சு, கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்நிலையில் ஆஸி. தொடக்க வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், நடராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த வருட ஐபிஎல் குறித்து அவர் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியை நாங்கள் சரியாக ஆரம்பிக்கவில்லை. ஆனால் 4, 5 வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டபோதும் கடைசிப் பகுதியில் தொடர்ச்சியாக வெற்றிகள் பெற்றோம். ஐபிஎல் போட்டியை முடித்த விதத்தில் எங்கள் அணி வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன். அடுத்த வருடம் இன்னும் ஒரு படி முன்னேறி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவோம். நட்டுவுக்குப் (நடராஜன்) பாராட்டுகள். உங்களை ஆஸ்திரேலியாவில் சந்திக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com