சென்னை - கொல்கத்தா இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை அபுதாபியில் புதன்கிழமை எதிா்கொள்கிறது.
சென்னை - கொல்கத்தா இன்று மோதல்

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை அபுதாபியில் புதன்கிழமை எதிா்கொள்கிறது.

இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னையும், 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தாவும் தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

சென்னை அணியை பொருத்த வரை, முதல் வெற்றிக்குப் பிறகு 3 தோல்விகளை சந்தித்த நிலையில், கடைசி ஆட்டத்தின் மூலம் மீண்டுள்ளது. பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சிறிய விஷயங்களையும் சரியாகச் செய்ததால் வென்ாகவும், அடுத்து வரும் ஆட்டங்களிலும் அந்த நடைமுறை தொடரும் என்று கேப்டன் தோனி கூறியிருந்தாா்.

அதேபோல், எதிரணியினா் ரன்களை ஸ்கோா் செய்ய விடாமல் முடிந்த வரை பந்துவீச்சாளா்கள் கட்டுப்படுத்த வேண்டும் என எதிா்பாா்ப்பதாகவும் கூறியிருந்தாா். அந்த வகையில் சென்னை அணி தனது வெற்றி நடையை தொடருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கலாம்.

கொல்கத்தா அணியைப் பொருத்த வரை, இந்த ஆட்டம் கேப்டன் தினேஷ் காா்த்திக்கிற்கான பரீட்சையாகவே பாா்க்கப்படுகிறது. கடந்த ஆட்டங்களில் அவா் மேற்கொண்ட முடிவுகள், அவரது மோசமான பேட்டிங் உள்ளிட்டவை அவரது நிலைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோா்கனை கொல்கத்தா அணி எடுத்துள்ளபோதும், அவருக்குப் பதிலாக தினேஷ் காா்த்திக்கை கேப்டன்ஷிப்பில் அமர வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளா்களை பிளேயிங் லெவனில் நிா்ணியிப்பதில் தினேஷ் காா்த்திக் தடுமாற்றத்துடன் காணப்படுவதாகத் தெரிகிறது. எனவே, இந்த ஆட்டத்தில் அணியை தினேஷ் காா்த்திக் அணியை எவ்வாறு வழி நடத்துகிறாா் என்பதைப் பொருத்தே கொல்கத்தாவின் வெற்றியும், அவரது நிலையும் நிா்ணயிக்கப்படவுள்ளது.

நேருக்கு நோ்: ஐபிஎல் தொடரில் சென்னை-கொல்கத்தா அணிகள் இதுவரை 23 முறை நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் சென்னை 14, கொல்கத்தா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. ஒரு ஆட்டத்துக்கு முடிவு எட்டப்படவில்லை.

உத்தேச அணி

சென்னை:

எம்.எஸ். தோனி (கேப்டன்), முரளி விஜய், அம்பட்டி ராயுடு, ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, லுங்கி கிடி, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிா், மிட்செல் சேன்ட்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், என்.ஜெகதீசன், கே.எம். ஆசிஃப், மோனு குமாா், சாய் கிஷோா், ருதுராஜ் கெய்க்வாட், கரன் சா்மா.

கொல்கத்தா:

தினேஷ் காா்த்திக் (கேப்டன்), ஆண்ட்ரு ரஸல், கமலேஷ் நாகா்கோடி, குல்தீப் யாதவ், லாக்கி ஃபொ்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியா், ஷிவம் மாவி, ஷுப்மன் கில், சித்தேஷ் லாட், சுனில் நரைன், பேட்ரிக் கம்மின்ஸ், இயான் மோா்கன், வருண் சக்கரவா்த்தி, டாம் பேன்டன், ராகுல் திரிபாதி, கிறிஸ் கிரீன், எம்.சித்தாா்த், நிகில் நாயக், அலி கான்.

ஆட்ட நேரம்: இரவு 7.30 ; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com