கொல்கத்தா அசத்தல் பந்துவீச்சு: 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கத்தா அசத்தல் பந்துவீச்சு: 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

13-வது ஐபிஎல் சீசனின் 21-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

168 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். 

கடந்த ஆட்டத்தைப்போல் அல்லாமல் சென்னைக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. டு பிளெஸ்ஸி 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்த நிலையில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து வாட்சனும், அம்பதி ராயுடுவும் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

இருவரும் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை உயராமல் கவனித்துக் கொண்டனர்.

பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நிலையில், ராயுடு 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த இணை 69 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, தோனி முன்கூட்டியே களமிறங்கினார். ராயுடு ஆட்டமிழந்த ஓவரிலேயே வாட்சனும் அரைசதத்தை எட்டினார்.

ஆனால், அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே நரைன் சுழலில் ஆட்டமிழந்தார் வாட்சன். இதனால், சென்னைக்கு நெருக்கடி அதிகரித்தது. வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் கடைசி 5 ஓவர்களில் 58 ரன்கள் தேவை என ஓவருக்கு 10-ஐத் தாண்டியது. 

இதையடுத்து, நரைன் வீசிய 16-வது ஓவரில் சாம் கரண் சிக்ஸரும், பவுண்டரியும் அடிக்க 4 ஓவர்களுக்கு 44 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தோனி பவுண்டரி அடிக்க, அடுத்த பந்திலேயே போல்டும் ஆனார். கடைசி 3 பந்துகளில் ஜாதவ் 1 ரன்னும் எடுக்காததால் அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதையடுத்து, கடைசி 3 ஓவர்களில் 36 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்திலேயே கரண் ஆட்டமிழக்க, அடுத்த 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என இலக்கு மிகவும் கடினமானது. அந்த ஓவரில் ஜாதவும், ஜடோவும் தலா 1 பவுண்டரி மட்டுமே அடிக்க 10 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை. முதல் 3 பந்துகளில் ஜாதவ் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி 3 பந்துகளில் ஜடேஜா சிக்ஸரும், 2 பவுண்டரியும் அடித்து ஆறுதல் அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. 

ஜடேஜா 8 பந்துகளில் 21 ரன்களுடனும், ஜாதவ் 12 பந்துகளில் 7 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம், கொல்கத்தா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் மவி, நாகர்கோடி, நரைன், வருண் மற்றும் ரஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com