என்னுடைய வளர்ச்சிக்கு தோனி முக்கியக் காரணம்: ஐபிஎல் போட்டியில் அசத்தி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்

பேட்ஸ்மேனின் காலைக் கவனித்தால் அவர் என்ன செய்கிறார் என்பது முதலிலேயே தெரிந்துவிடும்...
என்னுடைய வளர்ச்சிக்கு தோனி முக்கியக் காரணம்: ஐபிஎல் போட்டியில் அசத்தி வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்

ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி வரும் ஆர்சிபி அணி வீரர் வாஷிங்டன் சுந்தர், தனது வெற்றியின் ரகசியம் குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். 

தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி எந்த ஒரு ஆட்டத்திலும் 20 ரன்களுக்கு அதிகமாகக் கொடுக்கவில்லை. அதுவும் பவர்பிளேயில் இவர் குறைந்தது 2 ஓவர்களாவது வீசுவதால் எதிரணியால் அதிக ரன்கள் குவிக்க முடியாமல் போய்விடுகிறது. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகள் எடுத்துள்ள வாஷிங்டன், 4.90 எகானமி வைத்து அசத்தியுள்ளார். இந்த வருடம், குறைந்தது 4 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள வீரர்களில் குறைந்த எகானமி கொண்ட பந்துவீச்சாளர் இவர்தான். 

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:

2017-ல் புணே அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் நான் விளையாடினேன். ஒரு கிரிக்கெட் வீரராக நான் வளர்வதற்கு அவர் முக்கியக் காரணம். அதுமுதல் ஒரு பந்துவீச்சாளராக நாளுக்கு நாள் நான் வளர்ந்துகொண்டிருக்கிறேன். 

பந்தை எப்படி வீசுகிறோம் என்பது முக்கியம். பேட்ஸ்மேனின் காலைக் கவனித்தால் அவர் என்ன செய்கிறார் என்பது முதலிலேயே தெரிந்துவிடும். அந்தக் குறிப்பைத் தெரிந்துகொண்டால் நாம் என்ன செய்தால் அது பேட்ஸ்மேனுக்குப் பிடிக்காதோ அதைச் செய்ய முடியும். பந்தை என் கையிலிருந்து தாமதமாக விடுவதையே விரும்புவேன். அதன்மூலம் பேட்ஸ்மேன் என்ன செய்யவுள்ளார் என்பதைத் தெரிந்துகொண்டு பந்துவீச முடியும். என் உயரம் எந்தளவுக்கு எனக்குச் சாதகமானதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவும் முயல்கிறேன். 

கேப்டன் கோலிக்கு என் மீது நம்பிக்கை உள்ளதால் பவர்பிளே பகுதியில் பந்துவீச அழைக்கிறார். ஆஃப் ஸ்பின்னருக்கு கேப்டனின் நம்பிக்கை மிக முக்கியம். மேலும் ஒரு பேட்ஸ்மேனாக ஆர்சிபி அணிக்கு வெற்றித் தேடித் தரவும் ஆசைப்படுகிறேன். இந்தியாவுக்காக அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com