மீண்டும் வெற்றி தேடித் தந்த டி வில்லியர்ஸ்: ராஜஸ்தான் தோல்வி

​ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். முதல் 2 ஓவர்கள் அடக்கி வாசித்த பின்ச், ஆர்ச்சர் வீசிய 3-வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார். ஆனால், அடுத்த ஓவரிலேயே ஷ்ரேயஸ் கோபால் பந்தில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பின்ச்.

இதன்பிறகு, படிக்கல் மற்றும் விராட் கோலி பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் ஓவருக்கு 11-க்கு மிகாமல் கவனித்துக் கொண்டது. அதிரடிக்கு மாறி பெரிய பாட்னர்ஷிப்பாக உருவாக வேண்டிய நிலையில் ராகுல் தெவாதியா பந்தில் படிக்கல் 35 ரன்களுக்கு (37 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்தது. படிக்கலைத் தொடர்ந்து கோலியும் அடுத்த ஓவரிலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். கார்த்திக் பந்தில் ஆட்டமிழந்த அவர் 32 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, ஏபி டி வில்லியர்ஸுடன், குர்கீரத் மான் சிங் இணைந்தார். இந்த இணையால் தொடக்கத்தில் பெரிதளவு பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை. இதனால், கடைசி 4 ஓவர்களில் பெங்களூரு வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டன. உனத்கட் வீசிய 17-வது ஓவரில் 1 சிக்ஸர் உள்பட 9 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 18-வது ஓவரை தியாகி வீச அதில் 1 பவுண்டரி உள்பட 10 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

இதனால், கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் தேவை என்ற மிகவும் கடினமான நிலை ஏற்பட்டது. 19-வது ஓவரை உனத்கட் வீசினார். டி வில்லியர்ஸ் முதல் 3 பந்துகளை சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு, பெங்களூருவுக்கு நம்பிக்கையளித்தார். குர்கீரத்தும் 1 பவுண்டரி அடிக்க 19-வது ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

கடைசி ஓவரை ஆர்ச்சர் வீசினார். முதல் 2 பந்துகளில் குர்கீரத் 3 ரன்களும், 3-வது பந்தில் டி வில்லியர்ஸ் 2 ரன்னும் எடுத்தார். கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டன நிலையில், டி வில்லியர்ஸ் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 22 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். குர்கீரத் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com