என்ன செய்தார் கோலி? வெற்றிக்குக் காரணம் என்ன?

ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்தால், ஒரே முடிவுதான் கிடைக்கும். முடிவில் மாற்றம் வேண்டுமானால், செயல்பாட்டில் மாற்றம் வேண்டும். இப்படி பெங்களூரு செய்த மாற்றம்தான், நேற்று வெற்றி தேடித் தந்துள்ளது
என்ன செய்தார் கோலி? வெற்றிக்குக் காரணம் என்ன?


ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்தால், ஒரே முடிவுதான் கிடைக்கும். முடிவில் மாற்றம் வேண்டுமானால், செயல்பாட்டில் மாற்றம் வேண்டும். இப்படி மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு செய்த மாற்றம்தான், அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 10-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று (திங்கள்கிழமை) மோதின. இரண்டு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் அடிக்க பரபரப்பாக சென்ற ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவரில் பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது. 

இந்த ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கிய பெங்களூரு அணி, 2-வது ஆட்டத்தில் மிகவும் மோசமாக தோல்வியடைந்தது. இதையடுத்து, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு சில மாற்றங்களை செய்தது. இதன் விளைவு 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு.

மாற்றம் 1:

அந்த அணியில் நேற்றைய ஆட்டத்தில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. 

ஜோஷ் பிலிப்பி, டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஆடம் ஸாம்பா, இசுரு உடானா, குர்கீரத் மான் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

ஜோஷ் பிலிப்பி நீக்கமும், ஆடம் ஸாம்பா வருகையும்:

ஜோஷ் பிலிப்பி இயல்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். முதல் ஆட்டத்தில் அவரை பின்வரிசையில் களமிறக்கி பரிசோதனை செய்தது பெங்களூரு. பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கோலி களமிறங்கும் 3-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் விரைவில் ஆட்டமிழக்க அணிக்கு சற்று நெருக்கடியளித்தது. அவரை முன்கூட்டியே களமிறக்க இடமில்லை. தேவ்தத் படிக்கல், பின்ச், கோலி, டி வில்லியர்ஸ் என நட்சத்திர பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே, அவரை அணியிலிருந்து நீக்கியது சிறந்த முடிவு.

இவருக்குப் பதில் ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டது மிகவும் சிறப்பான முடிவு. இந்த சீசனில் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்களே பேட்ஸ்மேன்களுக்கு பெரிதளவில் அழுத்தம் தருகின்றனர். பெங்களூருவில் யுஸ்வேந்திர சஹால் இருந்தாலும், மற்றொரு தலைசிறந்த பந்துவீச்சாளர் இருப்பது பலமே. பஞ்சாப் அணியில் ரவி பிஷ்னாய் மற்றும் முருகன் அஸ்வின், ராஜஸ்தான் அணியில் ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவாதியா ஆகியோர் கூட்டணியாக நெருக்கடியளித்து வருவதை பார்க்கிறோம். இதைப் போலவே, சஹாலும், ஸாம்பாவும் நடு ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தலாம். 

இதுதவிர ஆடம் ஸாம்பா தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதல் 2 டி20 ஆட்டங்களில் அதிக ரன்களைக் கொடுத்திருந்தாலும், அதன்பிறகு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். அவர் வீழ்த்திய பெரும்பாலான விக்கெட் பாட்னர்ஷிப் பிரேக்கராக ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த தொடர் முடிந்த கையோடு அவர் நேராக ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபை வந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் இவர் சேர்க்கப்பட்டதும் அணிக்கு நல்ல பலனளித்தது. மும்பை அணியின் அபாயகரமான பாண்டியா விக்கெட்டை வீழ்த்தினார் ஸாம்பா. அவரது கடைசி ஓவரில் மட்டும்தான் அவர் 27 ரன்கள் கொடுத்தார். ஆனால், அந்த ஓவரின் 2-வது பந்திலேயே போலார்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெகி தவறவிட்டார். அதைப் பிடித்திருந்தால், ஆட்டம் முன்கூட்டியே முடிந்திருக்கும், ஸாம்பாவுக்கும் அது 27 ரன்கள் ஓவராக மாறியிருக்காது.

உமேஷ் யாதவ், டேல் ஸ்டெயின் நீக்கமும், இசுரு உடானா வருகையும்:

பெங்களூரு அணிக்கு முதல் 2 ஆட்டங்களில் உமேஷ் யாதவ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோரே பவர் பிளே ஓவர்களைத் தொடங்கினர். இவர்கள் 2 ஆட்டங்களிலும் பெரிதளவில் நெருக்கடியளிக்கவில்லை. மாறாக பவுண்டரிகளையுமே அதிகளவில் கொடுத்தனர். இருவரும் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று மதிப்பளிக்க வேண்டும். ஆனால், தற்போது அவர்களுக்கு ஏதுவான நேரமாக இல்லாததால், அவர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டது சரியான முடிவாக இருக்கும். உமேஷ் முதல் 2 ஆட்டங்களில் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஆனால், ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். ஸ்டெயின் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆனால், அவரும் நிறைய ரன்களையே கொடுத்துள்ளார்.

இசுரு உடானா, டி20 ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளராகக் கருதப்படுகிறார். முதல் ஆட்டத்திலேயே அவர் சேர்க்கப்படாதது கேள்விகளை எழுப்பின.

நேற்றைய ஆட்டத்தை இவர் சேர்க்கப்பட்டதற்குப் பலனளிக்கும் வகையில், அவர் தனது 2-வது ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். பவர் பிளேவில் விக்கெட்டை வீழ்த்துவது எதிரணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும். மேலும், கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவை என்ற நிலையில், இவர் 5-வது பந்தில் கிஷன் (99 ரன்கள்) விக்கெட்டைக் கைப்பற்றினார். இதனால், ஆட்டம் சமனில் முடிந்தது.

அணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றங்கள் பெங்களூருவுக்குப் பலனளித்துள்ளது. 

மாற்றம் 2:

வாஷிங்டன் சுந்தரை பவர்பிளே ஓவரில் வீச வைத்தது. வாஷிங்டன் சுந்தர் இயல்பாகவே புணே அணியிலிருந்த நேரத்திலும், இந்திய அணிக்காக விளையாடும்போதும் பவர்பிளே ஓவர்களில் வீசக் கூடியவர். பெங்களூரு அணிக்கும் முன்பாக அவர் பவர் பிளே ஓவர்களில் வீசியிருக்கிறார். அதுவே அவரது பலமாக பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த சீசனின் முதல் 2 ஆட்டங்களில் அவர் மொத்தமே 3 ஓவர்கள்தான் வீசியிருந்தார். அதில் ஒன்றுகூட பவர் பிளே ஓவர் கிடையாது. 3 ஓவர்களிலும் அவர் மொத்தமே 20 ரன்கள்தான் கொடுத்திருந்தார். அப்படி இருந்தும், ஒரு ஆட்டத்தில்கூட அவரை ஏன் 4 ஓவர்கள் முழுமையாக வீச அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் அவர் 2-வது ஓவரிலேயே பந்துவீச அனுமதிக்கப்பட்டார். இந்த மைதானம் வித்தியாசமாக ஸ்கொயர் பவுண்டரி ஒரு பக்கம் 82 மீட்டராகவும் இன்னொரு பக்கம் 68 மீட்டராகவும் உள்ளன. இதை வாஷிங்டன் சுந்தர் நன்கு பயன்படுத்தி ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்தினார்.

மைதானத்தின் அளவு மட்டுமே அவருக்கு சாதகமாக அமைந்தது என்று கூறிவிட முடியாது. அவர் வீசிய முதல் 3 பந்துகளில் ரோஹித் சர்மாவால் ஒரு ரன்கூட எடுக்க முடியவில்லை. ஒரு ரன் எடுத்திருந்தால் பெரிய நெருக்கடியோ அழுத்தமோ இருந்திருக்காது. முதல் 3 பந்துகளில் 1 ரன் கூட கிடைக்காததால், ரோஹித் சர்மா பவுண்டரி அடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானார். விளைவு 4-வது பந்தில் விக்கெட். முதல் 3 பந்துகளில் 1 ரன்கள் ஓடி எடுத்திருந்தாலும், ரோஹித் பவுண்டரி அடிக்க எண்ணியிருக்க மாட்டார். இதுவே நல்ல தொடக்கமாக அமைந்தது.

மேலும், அவர் பவர் பிளேவில் 3 ஓவர்கள் வீசினார். 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 200 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடும்போது பவர் பிளேவில் இவ்வாறு பந்துவீசுவது அணிக்கு எப்போதும் சாதமாகத்தான் அமையும். நேற்றும் சாதகமாகவே அமைந்தது. அவர் மொத்தம் வீசிய 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தில் பவுண்டரி கொடுக்காத ஒரே பந்துவீச்சாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டுள்ள மாற்றங்களே பெங்களூரு அணியை பலம் வாய்ந்த அணியாக உருவாக்கம் செய்திருக்கிறது. 

வரும் ஆட்டங்களில் செய்ய வேண்டியது என்ன?

பெங்களூரு அணி இதில் வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஆட்டங்களில் இன்னும் ஒரு சில சிக்கல்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. 

துபே பந்துவீசாதது ஏன்?

டி20 கிரிக்கெட்டில் 6-வது பந்துவீச்சாளர்தான் அணியை சமநிலைக்கு கொண்டு வருவார். முதல் இரண்டு ஆட்டங்களில் பெங்களூரு அணியின் 6-வது பந்துவீச்சாளராக துபே இருந்தார். விளைவாக 2 ஆட்டங்களில் தலா 2 விக்கெட்டுகள் என மொத்தம் 4 விக்கெட்டுகளை வீசி அசத்தியிருந்தார். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் அவர் ஒரு பந்துகூட வீசவில்லை. 5 பந்துவீச்சாளர்களைக் கொண்டு மட்டுமே பெங்களூரு விளையாடியது. 8 முதல் 13 ஓவர்களுக்கிடையே ஏதேனும் ஒரு ஓவரைக் கொடுத்திருந்தால்கூட பின்னாடி உதவியிருக்கும். 

ஸாம்பா மற்றும் சஹால் விக்கெட் வீழ்த்துபவர்களாக இருந்தாலும், கடைசி கட்டத்தில் ரன் கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை துபே ஒன்றிரண்டு ஓவர்களை வீசியிருந்தால், கடைசி கட்டத்தில் ஸாம்பா அல்லது சஹால் இருவரில் ஒருவரை நிறுத்தியிருக்கலாம். இது மும்பைக்கு கூடுதல் நெருக்கடியளித்திருக்கும். கோலி ஏன் அவரைப் பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை. 

அடுத்தடுத்த ஆட்டங்களில் துபே மீண்டும் பந்துவீச்சுக்குப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.  

கீப்பர் யார்?

நேற்றைய ஆட்டத்தில் பிலிப்பி நீக்கப்பட்டதால், பார்த்தீவ் படேல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குர்கீரத் மான் சிங் சேர்க்கப்பட்டார். இதனால், டி வில்லியர்ஸ் கீப்பர் பொறுப்பை ஏற்றார். 

பார்த்தீவ் படேல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கக் கூடியவர். பவர் பிளே ஓவர்களில் பவுண்டரிகள் அடித்து துரிதமாக ரன் சேர்ககக் கூடியவர். ஆனால், தொடக்க ஆட்டக்காரராக படிக்கல் தனது இடத்தை நிரப்பி விட்டார். முதல் 3 ஆட்டங்களில் 2 அரைசதங்கள். அதனால், அவரை தொந்தரவு செய்ய முடியாது.

அதேசமயம், பார்த்தீவ் படேலை பின்வரிசையில் களமிறக்குவது தவறான முடிவாக இருக்கும். 

டி வில்லியர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் கீப்பராக செயல்பட்டாலும், வரும் ஆட்டங்களிலும் அவரையே பயன்படுத்துவது சற்று சிக்கலை ஏற்படுத்தலாம். ஐபிஎல் நீண்ட தொடர் என்பதால், வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியமாகும். நேற்றைய ஆட்டத்திலேயே டி வில்லியர்ஸால் பரிசளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அவருடைய ஆட்ட நாயகன் விருதை அவருக்குப் பதில் கோலிதான் பெற்றுச் சென்றார்.

எனவே, டி வில்லியர்ஸை நீண்ட நாள்களாக கீப்பராகப் பயன்படுத்துவதற்குப் பதில் அவரது வயதைக் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் மாற்று வழியைக் கண்டறிய வேண்டும்.

கேட்ச்:

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியடைந்ததற்கு கோலி தவறவிட்ட 2 கேட்ச் முக்கியப் பங்கு வகித்தது. நேற்றைய ஆட்டத்திலும், அது முக்கியப் பங்கை வகித்திருக்கக் கூடியது. போலார்ட் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெகி தவறவிட்டார். விளைவு கடைசி வரை இருந்து 24 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் அவர் பவுண்டரி அடித்ததுதான் ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றது. 

எனவே, பெங்களூரு அணி வரும் ஆட்டங்களில் கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது. பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கேப்டன் கோலியும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், இதில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சிறிய மாற்றங்கள் சில நேரங்களில் மிகப் பெரிய நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, வரும் ஆட்டங்களில் பெங்களூரு இவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com