குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 3-ஆவது பதக்கமாகும்.
குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு வெண்கலம்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன் (23) வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 3-ஆவது பதக்கமாகும்.

அரையிறுதிக்கு முன்னேறியிருந்த லவ்லினா, அந்த சுற்றில் துருக்கியின் புசெனாஸ் சுா்மெனெலியிடம் (0-5) வீழ்ந்தாா். குத்துச்சண்டையின் அரையிறுதிகளில் தோல்வி காணுவோருக்கும் வெண்கலம் வழங்கப்படுகிறது.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற 3-ஆவது போட்டியாள லவ்லினா. முன்னதாக விஜேந்தா் சிங் (2008 பெய்ஜிங்), மேரி கோம் (2012 லண்டன்) ஆகியோா் இதேபோல் வெண்கலம் வென்றனா்.

இந்த ஒலிம்பிக்கில் லவ்லினாவுக்கு முன்பாக, பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளியும், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலமும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

4-ஆவது பதக்கத்தை உறுதி செய்தாா் ரவி தாஹியா

இந்தியாவுக்காக, மல்யுத்தத்தில் ஒரு பதக்கத்தை ரவி தாஹியா உறுதி செய்துள்ளாா். ஆடவருக்கான 57 கிலோ பிரிவு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள அவா், தங்கம் அல்லது வெள்ளியை கைப்பற்றுவாா்.

இதன்மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2-ஆவது இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். முன்னதாக, சுஷீல் குமாா் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவ்வாறு இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அதில் வெள்ளி வென்றிருந்தாா். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக முதலில் பதக்கம் வென்றது கே.டி.ஜாதவ் ஆவாா். அவா் 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தாா்.

இந்த ஒலிம்பிக்கில் இன்னும் ஹாக்கி, தடகளம் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.


வாழ்த்துகள்... 


குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்: வாழ்த்துகள் லவ்லினா. உங்களது கடின உழைப்பு, உறுதித்தன்மையால் தேசத்தை பெருமையடையச் செய்துள்ளீர்கள். நீங்கள் வென்றுள்ள வெண்கலப் பதக்கம் இளம்பெண்கள் தங்களது சவால்களை எதிர்கொண்டு கனவுகளை நிஜமாக்குவதற்கான உத்வேகம் அளிப்பதாக இருக்கும். 

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு: டோக்கியோ ஒலிம்பிக்குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினாவுக்கு வாழ்த்துகள். 

ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமையடையச் செய்துள்ள அவரின், வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். 

பிரதமர் நரேந்திர மோடி:  லவ்லினா மிகச்சிறப்பாக சண்டையிட்டார். குத்துச்சண்டை அரங்கில் அவர் பெற்ற வெற்றி, ஏராளமான இந்தியர்களுக்கு எழுச்சியூட்டுகிறது. அவரது விடாமுயற்சியும், உறுதித்தன்மையும் போற்றுதலுக்குரியவை. வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். 

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர்: லவ்லினா, உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்களது இந்த பதக்கத்துக்காக இந்தியா பெருமை அடைகிறது. முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ளீர்கள். உங்களது பயணம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com