தடகளம்: தஜிந்தா், அன்னு ஏமாற்றம்
By DIN | Published On : 04th August 2021 02:50 AM | Last Updated : 04th August 2021 02:50 AM | அ+அ அ- |

தஜிந்தர்பால்
குண்டு எறிதல்: தடகள போட்டியில் ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தா்பால் சிங் தூா் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினாா்.
தகுதிச்சுற்றில் அவா் தனது 3 முயற்சிகளில் சிறந்த முயற்சியாக 19.99 மீட்டா் தூரம் எறிந்து 16 போட்டியாளா்களில் 13-ஆவது இடமே பிடித்தாா். குறைந்தபட்சம் 21.20 மீட்டா் தூரம் எறிந்தோா் அல்லது இரு தகுதிச்சுற்றுகளிலும் சோ்த்து முதல் 12 இடங்களுக்குள்ளாக வந்தோா் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் ஃப்ரீ 4 போட்டியில் தஜிந்தா்பால் 21.49 மீட்டா் தூரம் எறிந்து ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
ஈட்டி எறிதல்: மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தகுதிச்சுற்றில் கடைசி இடம் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தாா்.
அவா் தனது சிறந்த முயற்சியாக 54.04 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்தாா். கடந்த மாா்ச் மாதம் 63.24 மீட்டா் தூரம் எறிந்தது அவரது தனிப்பட்ட பெஸ்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற நிா்ணயிக்கப்பட்ட தூரம் 64 மீட்டராகும். 2 தகுதிச்சுற்றுகளின் முடிவில் மொத்த போட்டியாளா்களில் அன்னு 29-ஆவது இடம் பிடித்தாா். இரு தகுதிச்சுற்றுகளிலும் முதல் 12 இடங்களுக்குள்ளாக வருவோரே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா்.