சென்னை ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்?: பிசிசிஐ ஆலோசனை!

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன...
சென்னை ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம்?: பிசிசிஐ ஆலோசனை!

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல்.போட்டியை நடத்தக்கூடாது. மீறி போட்டி நடந்தால், மைதானத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று பல்வேறு அமைப்புகள் கூறியிருந்தன.

ஆனால், ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என அறிவித்தது. பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள், அதி தீவிரப்படை வீரர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேவேளையில் ரசிகர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் பதற்றத்துடன் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை முதல் சேப்பாக்கத்தின் பல்வேறு சாலைகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரித்தனர்.

போலீஸாரின் கடுமையான கண்காணிப்பை மீறி, தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் வாலாஜா சாலை வழியாக மைதானத்தின் ஒன்றாம் எண் வாசலுக்கு வந்து, அங்குள்ள கேட்டுக்கு பூட்டுப்போட்டனர். அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். மதியம் சுமார் 2 மணிக்கு பின்னர் வாலாஜா சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அண்ணா சாலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் 3.30 மணிக்கு கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டனர். அண்ணா சிலைஅருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மைதானம் நோக்கி செல்ல முயன்றபோது வாலாஜா சாலை சந்திப்பில் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மைதானம் நோக்கிச் செல்ல முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்தவர்கள் தடுக்கப்பட்டதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாம் தமிழர் கட்சி கட்சித் தலைவர் சீமான் தனது கட்சித் தொண்டர்களுடன் அங்கு வந்து ஐ.பி.எல். போட்டி, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது காலணிகள் வீசப்பட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கின் 7.2 ஓவரின் போது எஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து திடீரென மைதானத்துக்குள் ஒரு ஜோடி காலணிகள் வீசப்பட்டன. அங்கு பீல்டிங் செய்த டுபிளெசிஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காலணிகளை வெளியே வீசினர். இச்சம்பவத்தால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே எஸ் ஸ்டாண்ட் பகுதிக்குச் சென்ற பாதுகாவலர்கள் அங்கு நாம் தமிழர் கட்சி கொடியுடன் இருந்த 6 பேரைக் கைது செய்தனர்.

ஐ.பி.எல். போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவல்லிக்கேணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 63 பேர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 75 பேர், நாம் தமிழர் கட்சி 237 பேர், தமிழர் எழுச்சி இயக்கத்தின் 32 பேர் என மொத்தம் 780 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றைய சம்பவங்களால் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டங்களை இடமாற்றம் செய்ய பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இத்தகவலை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதி செய்துள்ளார். வீரர்களின் பாதுகாப்பை முன்னிட்டு சென்னையிலிருந்து வேறு இடத்துக்கு மீதமுள்ள ஆறு ஆட்டங்களை இடமாற்றம் செய்ய ஆலோசித்து வருவதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்கள் கேரளாவுக்கு மாற்றப்படும் என்று அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com