இனிமேல் முதலில் ஆடினால்தான் வெற்றி?: தலைகீழாக மாறும் ஐபிஎல் நிலவரம்!

ஐபிஎல்-லில் டாஸ் வென்றாலே ஆட்டத்தையும் வென்றது மாதிரிதான் என்கிற கணக்கு தற்போது மாறிக்கொண்டு...
இனிமேல் முதலில் ஆடினால்தான் வெற்றி?: தலைகீழாக மாறும் ஐபிஎல் நிலவரம்!

ஐபிஎல்-லில் டாஸ் வென்றாலே ஆட்டத்தையும் வென்றது மாதிரிதான் என்கிற கணக்கு தற்போது மாறிக்கொண்டு வருகிறது. உண்மையில் ஐபிஎல் கேப்டன்களும் ரசிகர்களும் எதிர்பாராத திருப்பம் இது என்றே சொல்லலாம்.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப். 7-ம் தேதி தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் 14 வரை ஐபிஎல் 2018-ல் நிலவிய போக்கு சற்றே புதிராக இருந்தது. மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்ட ராஜஸ்தான் - தில்லி ஆட்டம் தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் இரண்டாவதாக ஆடிய அணியே வெற்றி பெற்றது. 10 ஆட்டங்களில் 9-ல் முதலில் ஆடிய அணிகள் தோல்வியடைந்தன. இதனால் டாஸ் வென்ற எல்லா கேப்டன்களுமே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்கள். இதனால் ஆட்டத்தின் முடிவை எதிர்பார்ப்பதில் இருந்த பரபரப்பு முற்றிலும் குறைந்துபோனது. எப்படியும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிதானே ஜெயிக்கும் என்கிற முடிவுக்கு வரமுடிந்தது. இதனால் ஐபிஎல்-லில் வழக்கமாக இருக்கும் பரபரப்புகளும் எதிர்பார்ப்புகளும் குறைந்துவிடுமோ என்கிற நிலை உருவானது. 

ஆனால் கடந்த ஞாயிறு முதல் திருப்புமுனை ஏற்பட்டுவிட்டது. அன்று நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் மட்டுமல்லாமல் நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் முதலில் ஆடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இதனால் முதலில் விளையாடினால் வெற்றி நிச்சயம் என்கிற நிலை தற்போது இல்லை. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் 11-வது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி மொத்தம் 217 ரன்களைக் குவித்தது. வழக்கம்போல இதிலும் பெங்களூர் தானே வெற்றி பெறும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், 20-வது ஓவர் முடிவில் பெங்களூரு அணி 198 ரன்களை மட்டுமே குவித்து தோல்வியைத் தழுவியது.


அதேநாளில் நடைபெற்ற இன்னொரு ஆட்டத்திலும் முதலில் விளையாடிய அணியே வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஆன ஐபிஎல் 12-வது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. எனினும்,  5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 44 பந்துகளில் தோனி 79 ரன்களைக் குவித்தும் சென்னை அணியால் வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் பஞ்சாப்பின் மொகித் சர்மா திறமையாக பந்து வீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார்.

சரி, ஒரு நாளில் இப்படி நடக்கலாம், அடுத்த நாளும் இந்தப் போக்கு தொடருமா என்கிற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது.

தில்லி டேர் டெவில்ஸ் அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற தில்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை எடுத்தது. ஆனால், 14.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களையே தில்லியால் எடுக்க முடிந்தது. இறுதியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்றது.

இந்த மாற்றம் ஐபிஎல்-லுக்கு நல்லது என்றே கருதமுடியும். டாஸில் தோற்று முதலில் விளையாடும் அணிகளுக்கு இது நம்பிக்கையை அளிக்கும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற தவறான நம்பிக்கையிலிருந்து விடுபடமுடியும். மேலும் கடைசி 3 ஆட்டங்களில் முதலில் விளையாடிய வெற்றி பெற்ற 3 அணிகளும் 195 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளன. இதனால் தற்போதைய நிலவரப்படி முதலில் பேட்டிங் செய்தால்தான் சாதகமான நிலை என்று தலைகீழாக மாறியுள்ளது ஐபிஎல் நிலவரம். 

இனிவரும் ஆட்டங்களில் கேப்டன்கள் என்ன முடிவு எடுப்பார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com