ஐபிஎல்-லின் தனித்துவமான அணி: பந்துவீச்சின் பலத்தில் வெற்றிகளைக் குவிக்கும் ஹைதராபாத்!
ஹைதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் 25-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஹைதராபாத் சன்ரைசர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் 25-வது ஆட்டம் வியாழக்கிழமை இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20-வது ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு வெறும் 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணியில் அங்கித் ராஜ்புத் 5 விக்கெட்டுகளையும், முஜிப்புர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆனால், பஞ்சாப் அணியால் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே பெற முடிந்தது. ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, பசில் தம்பி, ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் 13 ரன்களில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில், பந்துவீச்சின் பலத்தால், பங்களிப்பால் வெற்றிகளைக் குவிக்கும் ஒரே அணியாக உள்ளது ஹைதராபாத். இரண்டு முறை ஹைதராபாத் அணி குறைவாக ரன்கள் எடுத்தபோதும் பந்துவீச்சாளர்களின் சாதுரியத்தால் அபாரமான வெற்றிகளைக் கண்டுள்ளது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 18.4 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது ஹைதராபாத். ஆனால், 18.5 ஓவர்களில் 87 ரன்களுக்குச் சுருண்டது மும்பை. இதனால் எதிர்பாராதவிதமாக 31 ரன்களில் வெற்றியடைந்தது ஹைதராபாத். நேற்றும் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனினும் அற்புதமான பந்துவீச்சால் பஞ்சாப்பை 119 ரன்களுக்குச் சுருட்டியது. இதனால் 13 ரன்களில் வெற்றி கண்டு புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேபோல ஹைதராபாத் முதலில் பந்துவீசியபோதும் எதிரணிகள் ரன்கள் குவிக்கமுடியாமல் திணறின. ராஜஸ்தான் 125 ரன்களும் மும்பை 147 ரன்களும் கொல்கத்தா 138 ரன்களும் மட்டுமே எடுத்தன. இதனால் இந்த எளிதான இலக்குகளைச் சுலபமாகக் கடந்து வெற்றியடைந்தது ஹைதராபாத். ஒருபக்கம் பேட்டிங்கில் சிஎஸ்கே அணி அசத்தி வருகிறபோது பந்துவீச்சில் அசத்தி தனித்துவமான அணியாக உள்ளது.
இதனால் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று வீரர்களில் இரு ஹைதராபாத் வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம், ஹைதராபாத்தின் முக்கிய பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். அவருடைய உதவி பெரிதாக இல்லாமலேயே சித்தார்த் கெளல், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகிய மூன்று வீரர்களும் எதிரணிகளை அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்களாக உள்ளார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் என இந்த ஐபிஎல்-லில் பல அணிகள் பேட்டிங்கில் தங்களுடைய பலத்தை நிரூபித்து வரும் நிலையில் ஹைதராபாத் அணி மட்டுமே கூர்மையான பந்துவீச்சினால் வெற்றிகளை அடைந்துவருகிறது. இதனால் கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளார் கேப்டன் கேன் வில்லியம்சன்.
ஐபிஎல் 2018 - அதிக விக்கெட்டுகள்
மார்கண்டே (மும்பை) - 10 விக்கெட்டுகள்
சித்தார்த் கவுல் (ஹைதராபாத்) - 9 விக்கெட்டுகள்
ரஷித் கான் (ஹைதராபாத்) - 9 விக்கெட்டுகள்
ஐபிஎல் 2018 - அதிக விக்கெட்டுகள் எடுத்த ஹைதராபாத் வீரர்கள்
சித்தார்த் கெளல் - 9 விக்கெட்டுகள்
ரஷித் கான் - 9 விக்கெட்டுகள்
ஷகிப் அல் ஹசன் - 8 விக்கெட்டுகள்
புவனேஸ்வர் குமார் - 6 விக்கெட்டுகள்
சந்தீப் சர்மா - 5 விக்கெட்டுகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.