விம்பிள்டன் இறுதியில் வெல்லப்போவது யார்? மாரத்தான் வீரர்கள் கெவின், ஜோகோவிச் மோதல்

விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் கெவின் ஆண்டர்சன், நோவாக் ஜோகோவிச் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
விம்பிள்டன் இறுதியில் வெல்லப்போவது யார்? மாரத்தான் வீரர்கள் கெவின், ஜோகோவிச் மோதல்

டென்னிஸ் விளையாட்டின் மிகவும் பிரபலமான கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் கோப்பையின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் மாரத்தான் வீரர் என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதுகின்றனர்.

முன்னதாக, சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது அரையிறுதியில் முன்னணி வீரர்கள் ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் இடையில் நடைபெற்றது. சமபலம் பொருந்திய இரு வீரர்களும் மோதிய இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 7-6 (11/9), 3-6, 10-8 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் போராடி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

5 மணிநேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டம் தான் விம்பிள்டன் வரலாற்றிலேயே நடந்த மிக நீண்ட நேரம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியாகவும் அமைந்தது.

முன்னதாக, முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மற்றும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் பலப்பரீட்சை நடத்தினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த மாரத்தான் ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் (வயது 32) வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

6 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-6 (8-6) 6-7 (5-7) 6-7 (9-11) 6-4 26-24 என்ற செட் கணக்கில் கெவின் வெற்றிபெற்றுள்ளார். அதிலும் கடைசி செட் ஆட்டம் மட்டும் 2 மணிநேரங்கள் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விம்பிள்டன் வரலாற்றிலேயே அதிக நேரம் நடைபெற்ற 2-ஆவது மிகப் பெரிய போட்டியாகவும் இது அமைந்தது. மேலும் டென்னிஸ் வரலாற்றிலேயே அதிக நேரம் நடைபெற்ற 3-ஆவது மிகப்பெரிய ஆட்டமாகும்.

அதுபோல விம்பிள்டன் அரையிறுதியில் நடைபெற்ற மிக நீண்ட நேர போட்டி என்ற சாதனையையும் படைத்தது. 

இதையடுத்து சுமார் 97 வருட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரர் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக, 1921-ஆம் ஆண்டு பிரையன் நார்டன், விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடியவர் ஆவார்.

இந்நிலையில்,  எளிதில் விட்டுக்கொடுக்காத கெவின் ஆண்டர்சன், நோவாக் ஜோகோவிச்  இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மற்றொரு மாரத்தான் போட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக டென்னிஸ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com