10 வருடங்களுக்குப் பிறகு 9-ஆவது விக்கெட்டுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு 9-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து தங்களின் சொந்த சாதனையை தகர்த்துள்ளது. 
10 வருடங்களுக்குப் பிறகு 9-ஆவது விக்கெட்டுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் சாதனை

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 35-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53, டிம் சௌத்தி 36* ரன்கள் சேர்த்தனர்.

கடந்த ஆட்டத்தில் தோல்விக்கு முக்கியப் பங்கு வகித்த சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா, இம்முறை சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விராட் கோலி உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூருவை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தார்.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு 9-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து தங்களின் சொந்த சாதனையை தகர்த்துள்ளது. இப்போட்டியில் 89 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த பெங்களூருவுக்கு 9-ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிம் சௌத்தி, முகமது சிராஜ் 38 ரன்கள் சேர்த்தனர். 

முன்னதாக, டிராவிட் - கும்ப்ளே ஜோடி கடந்த 2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 35 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் போட்டித் தொடரில் 9-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகளின் விவரம் பின்வருமாறு:

தோனி - அஸ்வின் மும்பைக்கு எதிராக 2013-ல் 41 ரன்கள்
பிராவோ - தாஹிர் மும்பைக்கு எதிராக 2018-ல் 41 ரன்கள்
டிம் சௌத்தி - சிராஜ் சென்னைக்கு எதிராக 2018-ல் 38 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com