கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு?: சாதித்த வீரர், வீராங்கனைகள்!

பாட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம் என பல விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் நிகழ்த்திய முக்கியமான சாதனைகள்...
கிரிக்கெட் மட்டுமா விளையாட்டு?: சாதித்த வீரர், வீராங்கனைகள்!
Published on
Updated on
9 min read

பாட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம் என பல விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் நிகழ்த்திய முக்கியமான சாதனைகள்:

தங்கம் வென்ற பி.வி. சிந்து

6 பெரிய போட்டிகளில் இறுதி ஆட்டங்களில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்ற சிந்துவுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பாக அமைந்துவிட்டது. 

ஒலிம்பிக் வெள்ளி மங்கையான சிந்து, தொடர்ந்து 3-ஆவது முறையாக உலகப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நஸோமி ஒகுஹராவை 21-7, 21-7 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக தங்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து.

முந்தைய 2 உலக பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தது தொடர்பாக என்னை விமர்சித்தவர்களுக்கு இந்த வெற்றியே பதிலாகும் என சிந்து கூறினார். உலக சாம்பியன் போட்டிகளில் சிந்து வெல்லும் 5-ஆவது பதக்கம் இதுவாகும். 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் இதில் அடங்கும். இந்திய பாட்மிண்டன் வரலாற்றில் தலைசிறந்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ள சிந்துவுக்கு உலக சாம்பியன் பட்டம் வென்றது மேலும் ஒரு மகுடமாக திகழ்கிறது.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக ஆடி முதன்முறையாக தங்கம் வென்றாலும் அதன் பின்னா் நடைபெற்ற கொரியா, சீன ஓபன், டென்மாா்க் ஓபன், ஹாங்காங் ஓபன் போட்டிகளில் தொடக்க சுற்றுகளிலேயே வெளியேறினாா். பிரெஞ்சு ஓபன் போட்டியில் மட்டுமே காலிறுதிக்கு தகுதி பெற்றாா். சீனாவில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு டூா் பைனல்ஸ் போட்டியிலும் தோல்வியடைந்தார். 

ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் 5-ஆவது சீசன் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீரா், வீராங்கனைகள் ஏலத்தில் உலக சாம்பியன் பி.வி.சிந்து ரூ. 77 லட்சத்துக்குத் தேர்வானார். 

ஐபிஎல், ஐஎஸ்எல், புரோலீக் கபடி, புரோ வாலிபால் போன்று, பாட்மிண்டனுக்கும் பிபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் உலகின் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். ஹைதராபாத் ஹண்டா்ஸ் அணி நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை ரூ.77 லட்சத்துக்கு வாங்கி தக்க வைத்துக் கொண்டது.

உலக சாதனை படைத்த மேரி கோம்! 

கடந்த இருபதாண்டுகளில் ஆறுமுறை உலக சாம்பியன் விருது பெற்று இந்திய மகளிர் குத்துச்சண்டைப் பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் 36 வயதாகும் மேரிகோம், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், இவருக்குப் பின் யார் என்ற கேள்வி எழாமல் இல்லை. 

ரஷியாவில் நடந்த 2019-ஆம் ஆண்டு உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் மட்டுமின்றி, மேலும் மஞ்சுராணி (19) ஜமுனா போரோ(22) மற்றும் லவ்லினா போர்கோஹைப்(22) ஆகிய இந்திய வீராங்கனைகளும் பங்கேற்றதோடு, ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என நான்கு பதக்கங்களை பெற்றிருப்பது இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் புதிய உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தான் முதன்முதலாக பங்கேற்ற உலக சாம்பியன் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றார் 19 வயது இளம் வீராங்கனை மஞ்சு ராணி. ஹரியாணாவின் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுராணி, அம்மாநிலத்தின் சார்பில் தேசிய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு தராததால், பக்கத்து மாநிலமான பஞ்சாப் சார்பில் பங்கேற்று தேசிய பட்டம் வென்றார். இதன் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்தார்.

மேரி கோமைப் பொறுத்தவரை உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இம்முறை வெண்கலப் பதக்கம் பெற்றது அவரது எட்டாவது பதக்கமாகும். ஆணாகட்டும் பெண்ணாகட்டும் குத்துச் சண்டை போட்டியைப் பொறுத்தவரை அவர் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவே விளங்குகிறார். மேரி கோம் 1983-இல் பிறந்தவா். 6 முறை உலக சாம்பியன், உள்பட 8 முறை உலகப் போட்டியில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளாா். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா். மேலும் 2014 இன்சியான் ஆசியப் போட்டி, 2018 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தாா். மேக்னிபிஷியன்ட் மேரி என அழைக்கப்படும் மேரி கோம், முதலில் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியில் பங்கேற்று வந்தாா். ஒலிம்பிக் போட்டியில் மகளிா் பிரிவில் 48 கிலோ எடைப்பிரிவு இல்லாத நிலையில், 51 கிலோ பிரிவுக்கு இடம் பெயா்ந்தாா் மேரி. 3 குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் வசம் பல்வேறு சாதனைகள் உள்ளன.

உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8 பதக்கங்களை வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளாா் மேரி கோம். 48 கிலோ எடைப்பிரிவில் அவா் 6 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா் மேரி. 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் மேரி கோம் 8, கியூபா வீராங்கனை பெலிக்ஸ் சவான் 7, அயா்லாந்து வீராங்கனை கேத்தி டெய்லா் 6 பதக்கங்களை வென்றுள்ளனா். 2012 ஒலிம்பிக் வெண்கலம், 5 ஆசிய சாம்பியன் பட்டம், ஆசிய, காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கங்கள், இந்திய ஓபன், இந்தோனேஷியா பிரசிடெண்ட் கோப்பை போட்டிகளிலும் தங்கம் வென்றுள்ளாா் மேரி.

ரஷியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்தார் அமித் பங்கால். ஆடவர் பிரிவின் இந்திய வீரர்களின் அதிகபட்ச சாதனையே வெண்கலம் வென்றதுதான். இந்நிலையில் அமித் பங்காலின் வெள்ளிப் பதக்கம் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு முன்பு, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே ஆண்டில் 2 பதக்கங்களை இந்தியா வென்றதில்லை. இந்த ஆண்டு இதே போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கௌஷிக் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தீபக் புனியா

உலகின் சிறந்த மல்யுத்த ஜூனியர் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 20 வயது இந்திய வீரர் தீபக் புனியா. இந்தக் கெளரவத்தைப் பெற்றுள்ள முதல் இந்திய வீரர். 

ஆகஸ்ட் மாதம் ஜூனியர் உலகக் கோப்பையை வென்றார் தீபக் புனியா. கடந்த 18 வருடங்களில் இச்சாதனையைச் செய்யும் முதல் இந்திய வீரர். ஆனால், அடுத்த ஒரு மாதத்தில் இதை விடவும் பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.

கஜகஸ்தானின் நுர்சுல்தான் நகரில் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி அண்மையில் நடைபெற்றது. ஆடவர் 86 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் தீபக் புனியா கணுக்கால் காயம் காரணமாக உலக சாம்பியன் ஈரானின் ஹஸ்தான் யஸ்தானிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் வெள்ளிப் பதக்கத்தோடு அவர் நாடு திரும்பினார். சீனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பது தீபக் புனியாவுக்கு இது முதல்முறையாகும். வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். 

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற வீரர்கள்

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. 

மிகச் சிறந்த வீரருக்கு உயர்ந்தபட்ச விருதாக ராஜீவ் கேல் ரத்னா விருது தரப்படுகிறது. இதில் ஒரு விருது, ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கும். 

இந்நிலையில் இந்த வருடம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜொலித்த தீபா மாலிக், மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் தலைமையில் கால்பந்து முன்னாள் நட்சத்திரம் பாய்சுங் புட்டியா, குத்துச்சண்டை உலக சாம்பியன் மேரி கோம் உள்பட 12 உறுப்பினர்கள் குழு இரு வீரர்களைத் தேர்வு செய்துள்ளது. 

ஆசிய போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற வீரரான பஜ்ரங் புனியா கடந்த 2018-ஆம் ஆண்டே ராஜீவ் கேல் ரத்னா விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது பெயர் தேர்வு செய்யப்படாத நிலையில் நீதிமன்றத்துக்கு செல்வேன் என எச்சரித்தார். இந்நிலையில் இந்த வருடம் அவருக்கு விருது கிடைத்துள்ளது. 

சுஷில்குமார், யோகேஷ்வர் தத், சாக்ஷி மாலிக்  உள்ளிட்டவர்களுக்கு பின் கேல்ரத்னா விருதைப் பெறும் 4ஆவது மல்யுத்த வீரர் பஜ்ரங் ஆவார். கடந்த 2018 ஜகார்த்தா ஆசிய போட்டி 65 கிலோ பிரிவில் தங்கம், கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் அதே பிரிவில் தங்கம், உலக சாம்பியன் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற சிறப்புடையவர். வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தரக்கூடியவராக கருதப்படுகிறார் பஜ்ரங் புனியா.

பாட்மிண்டனில் சாதிக்கும் வீரர்கள்

இந்த வருடம் பாட்மிண்டனில் சிந்து மட்டுமல்ல இதர வீரர்களும் சாதித்துக் காட்டினார்கள்.

சிந்து தங்கம் வென்றதோடு உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலமும் கிடைத்தது.  36 ஆண்டுகள் கழித்து உலகப் போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர் சாய் பிரணீத் 13-21, 8-21 என்ற கேம் கணக்கில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜப்பானின் கென்டோ மொமடோவிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த 1983 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் பிரகாஷ் பதுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கம் வென்றார். அதன்பின் 36 ஆண்டுகள் கழித்து சாய் பிரணீத் பதக்கம் வென்றுள்ளார். 

உத்தரகண்டைச் சேர்ந்த 18 வயது வீரர் லக்‌ஷ்யா சென் இந்த வருடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இந்த வருடம் 5 பட்டங்களை வென்ற லக்‌ஷ்யா சென், தரவரிசையில் 32-ம் இடம் பிடித்தார். சிந்து, சாய்னா போல லக்‌ஷ்யா சென்னும் பல சாதனைகளை நிகழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

ஒற்றையர் பிரிவில் மட்டுமல்ல, இரட்டையர் பிரிவிலும் இந்திய வீரர்களால் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ். சூப்பர் 500 பட்டமான தாய்லாந்து ஓபனை இந்த ஜோடி வென்று அசத்தியது. அடுத்ததாக பிரெஞ்சு ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது. 

மறக்க முடியாத கால்பந்து ஆட்டம்!

இந்திய அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுமா என்பது முக்கியமில்லை. தகுதி பெறாதது இந்தியக் கால்பந்து ரசிகர்கள் பெரிய குறையாக இருக்காது. அதற்குப் பதிலாக கத்தாருக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்தது தான் அவர்களுக்குக் கிடைத்த பெரிய விருந்து.

சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) சாா்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. கடந்த 2018-இல் பிரான்ஸ் அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த உலகக் கோப்பை போட்டி 2022-இல் கத்தாரில் நடத்தப்படுகிறது. இதற்காக கண்டங்கள் அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆசியாவில் குரூப் இ பிரிவில் கத்தாா், ஓமன், இந்தியா, ஆப்கானிஸாதன், வங்கதேச அணிகள் இடம் பெற்றன. உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தாா் நேரடித் தகுதி பெற்று விட்டது. 

டோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற  ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆசிய சாம்பியன் கத்தாருடன் மோதியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாரை 0-0 என டிரா செய்தது இந்தியா. வலுவான தற்காப்பு ஆட்டத்தால், கத்தாரின் கோலடிக்கும் முயற்சிகளை முறியடித்தனர். கேப்டனாக செயல்பட்ட குர்ப்ரீத் சிங் சாந்து அற்புதமாக செயல்பட்டு எதிரணியின் கோல் வாய்ப்புகளை முறியடித்தார். வலுவான கத்தார் அணியை கோல் போடவிடாமல் டிரா செய்தது இந்திய அணியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்திய கோல்கீப்பர் குர்ப்ரீத் இதில் முக்கிய பங்கு வகித்தார். உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக தரவரிசையில் கத்தார் 63-ஆவது இடத்திலும், இந்தியா 103-ஆவது இடத்திலும் உள்ளன.

குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உத்திகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1998-இல் பிஃபா உலகக் கோப்பையில் 3 ஆவது இடம் பெற்ற குரோஷிய அணியில் ஆடியவர் ஸ்டிமாக். மேலும் தனது தேசிய அணியின் பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்பட்டார். இளம் அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இகோர். அவரது பயிற்சியில் இந்திய வீரர்கள் உடல்தகுதி மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இகோர் ஸ்டிமாக் பயிற்சியில் இந்திய கால்பந்து மேலும் எழுச்சியை பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அசத்திய ஹிமா தாஸ்!

ஜூலை முதல் ஆகஸ்ட் வரை ஐரோப்பாவில் கலந்துகொண்ட போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றார் அஸ்ஸாமைச் சேர்ந்த 19 வயது ஹிமா தாஸ். இதனால், பிரதமர், ஜனாதிபதி முதல் இந்தியப் பிரபலங்கள் அனைவரும் சரசரவென வாழ்த்துகள் தெரிவித்தார்கள். அவர் உலக சாம்பியன் ஆனது போல, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது போல சமூகவலைத்தளங்கள் முழுக்க இவருக்கான பாராட்டுப் பதிவுகள்தான். அரசியல்வாதிகள், திரையுலகப் பிரபலங்கள், முன்னணி மற்றும் மூத்தப் பத்திரிகையாளர்கள் என ஹிமா தாஸைப் பாராட்டாத இந்தியப் பிரபலமே இல்லை என்றுகூடச் சொல்லலாம். எனினும் அதற்குப் பிறகு ஹிமா தாஸுக்கு நேரம் சரியாக அமையவில்லை.

கடந்த வருட  ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு முதுகு வலி காரணமாக அவதிப்படுகிறார் ஹிமா தாஸ். ஏப்ரலில் தோஹாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ. ஓட்டப்பந்தயத் தகுதிச்சுற்றில் காயம் காரணமாகப் பாதி ஓட்டத்திலிருந்து விலகினார். பிறகு, முதுகு வலி காரணமாகத் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்தும் விலகினார்.

அஸ்ஸாமில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 30 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமா தாஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஹெச்.ஆர் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது மாநிலத்துக்கு உதவும் விதமாக தன்னுடைய சம்பளத்தில் பாதியை அரசின் வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவதாக அறிவித்தார். 

உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலக பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டூட்டி சந்த் பெற்றார்.

3000 மீ. ஆடவா் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா் இந்தியாவின் அவினாஷ் சாப்லே. தோஹாவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் பிரிவில் 8 நிமிடம் 21.37 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்த ராணுவ வீரரான அவினாஷ் 13-ஆவது இடத்தையே பிடித்தாா். எனினும் இதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா்.

4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றுள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தத் தகுதியை பெற்றது.

துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் புதிய அலை!

செளரப் செளத்ரி, திவ்யான் சிங் பன்வார், அஞ்சும் மெளட்கில், அபூர்வி சண்டேலா, ரஹி சர்னோபத், மனு பாக்கர், யாஷாஸ்வினி சிங் தேஸ்வால், சிங்கி யாதவ், தேஜஸ்வி சாவந்த், அபிஷேக் வர்மா, சஞ்சீவ் ராஜ்புத், தீபக் குமார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், அங்கட் பஜ்வா, மைராஜ் அஹமது கான்.

இந்த 15 வீரர், வீராங்கனைகளும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் 21தங்கங்களை வென்றுள்ளார்கள். இதனால் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் ஆளுமை செலுத்தி வருகிறது இந்தியா.

எனினும் தமிழகத்துக்கு இளவேனிலின் வெற்றிகள் தான் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தன.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் தமிழ்ப் பெண்ணான இளவேனில் வாலறிவன். 

சீனாவின் புட்டியன் நகரில் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அணிகள் பிரிவில் இந்திய வீரா், வீராங்கனைகள் சரிவர சோபிக்கவில்லை. எனினும் தனிநபா் பிரிவில் அபாரமாக திறமையை வெளிப்படுத்தினார்கள்.

மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் 20 வயது இளவேனில் 250.8 புள்ளிகளைக் குவித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

இந்தச் சாதனைகளின் மூலம் துப்பாக்கி சுடுதல் மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக முன்னேறியுள்ளார் இளவேனில் வாலறிவன். 

இளவேனிலின் வெற்றிகளைத் தமிழகம் மிக அதிகமாகக் கொண்டாடி வருகிறது. கடலூர் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், இளவேனில். அங்குதான் பிறந்தார். இளவேனிலுக்கு 3 வயதாக இருக்கும்போது, இளவேனிலின் குடும்பம் குஜராத் - அஹமதாபாத்துக்கு இடம்பெயர்ந்தது. இப்போதும் அங்குதான் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் (ஜி. சத்யன்)

ஷரத் கமலிடமிருந்து இந்திய டேபிள் டென்னிஸை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் சத்யன் ஞானசேகரன் என்கிற ஜி. சத்யன். 

தரவரிசையில் 25 இடத்துக்குள் இடம்பெற்ற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை இந்த வருடம் பெற்றார் சத்யன். உலகின் நெ.5 வீரர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களை இந்த வருடம் தோற்கடித்து இந்தளவுக்கு முன்னேறியுள்ளார் சத்யன். கட்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சத்யன்-அர்ச்சனா இணை தங்கப் பதக்கம் வென்றது. 

நவம்பரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார் சத்யன். உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்த முதல் இந்திய வீரரும் சத்யன் தான். 

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், கொரியா, ஜொ்மனியில் சிறப்பு பயிற்சி பெற உள்ளேன். கொரிய தேசிய அணியுடன் வரும் 22 முதல் 30-ஆம் தேதி வரை தீவிர பயிற்சி பெறுவேன். இது ஒரு இந்திய வீரா் பெறும் முதல் வாய்ப்பாகும். அதன் பின் இந்திய அணி, ஜொ்மனியில் உள்ள டஸ்ஸல்டா்ப் நகரில் பயிற்சி பெறும். போா்ச்சுகலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் முதல் 9 இடங்களில் நுழைந்து விட்டாலே ஒலிம்பிக் தகுதியை அடைந்து விடும் என்று தன் கனவுகள் குறித்து கூறுகிறார் சத்யன்.

இந்திய டென்னிஸின் வளர்ச்சி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகலை பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் தோற்கடித்தார். முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், 6-4 என முதல் செட்டை வென்று ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் அடுத்த மூன்று செட்களையும் வென்ற ஃபெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என ஆட்டத்தை வென்றார். 

ரோஜர் ஃபெடரருக்கு எதிராக ஒரு செட்டை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சுமித் நாகல். இதற்கு முன்பு மூன்று முறை இந்திய வீரர்களிடம் மோதிய ஃபெடரர் ஒருமுறை கூட ஒரு செட்டையும் இழந்ததில்லை.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம், பியுனோஸ் அயா்ஸ் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றாா் சுமித் நாகல். இது அவரது இரண்டாவது ஏடிபி பட்டமாகும். கடந்த 2017-இல் பெங்களூரு சேலஞ்சா் போட்டியில் பட்டம் வென்றிருந்தாா். அவருக்கு இதன் மூலம் 26 ஏடிபி புள்ளிகள் கிடைத்தன. இதனால் தரவரிசையில் 161ஆம் இடத்தில் இருந்து 135-ஆவது இடத்துக்கு முன்னேறினாா் 22 வயது நாகல். வருட ஆரம்பத்தில் 340-ல் இருந்த நாகல், 130 தரவரிசையுடன் இந்த வருடத்தை முடித்துள்ளார்.

இந்திய பிரஜனேஷ் குணேஸ்வரன், ஏப்ரல் மாதம் தரவரிசையில் 75-ம் இடத்தில் இருந்தார். ஆனால் தொடர் தோல்விகளால் தற்போது 124-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் நகரில் நடைபெற்றன. 4-0 என பாகிஸ்தானைச் சாய்த்தது இந்தியா.

கடந்த 2014-இல் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என வீழ்த்தி இருந்தது இந்தியா. அதன்பின் தற்போது தான் 4-0 என முழுமையாக வென்றுள்ளது. இந்த வெற்றி மூலம் 2020 உலக தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது இந்தியா. வரும் மார்ச் மாதம் 6-7 தேதிகளில் உலகின் 2-ஆம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதுகிறது. 12 இடங்களுக்கு தகுதி பெற 24 அணிகள் மோதுகின்றன. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிஸ் கோப்பை போட்டி இரட்டையர் வரலாற்றில் 43-ஆவது வெற்றியை பெற்று சாதனை படைத்தார் லியாண்டர் பயஸ். 56 ஆட்டங்களில் 43-ஆவது வெற்றியைப் பெற்றார். இதற்கு முன்பு இத்தாலியின் நட்சத்திர வீரர் நிகோலா பீட்ரஞ்சலி 66 ஆட்டங்களில் 42 வெற்றிகளை குவித்து சாதனை நிகழ்த்தி இருந்தார். 2020-ம் ஆண்டுடன் ஓய்வு பெறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com