இந்திய கிரிக்கெட் 2019: சாதனைகளும் அழகிய தருணங்களும்

இந்த வருடம் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத வெற்றிகளும் தருணங்களும்...
இந்திய கிரிக்கெட் 2019: சாதனைகளும் அழகிய தருணங்களும்

இந்த வருடம் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத வெற்றிகளும் தருணங்களும்:

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி



ஆஸி. மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது கோலி தலைமையிலான இந்திய அணி.

ஆஸ்திரேலியாவில் கடந்த 1980-81, 1985-86, 2003-04 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற தொடரை இந்தியா சமன் செய்துள்ளது. 1967-68, 1977-78, 1991-92, 1999-2000, 2007-08, 2011-12, 2014-15 ஆகிய காலகட்டங்களில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டுள்ளது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.  மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் டிரா ஆனது. கடைசி டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் புஜாராவுக்குக் கிடைத்தன. 

2011 உலகக் கோப்பை வெற்றியை விடவும் உணர்வுபூர்வமானது இந்த டெஸ்ட் தொடர் வெற்றி என்றார் கோலி. இங்கு மூன்றாவது முறையாக வருகிறேன். இங்கு வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். அதேபோல ஓர் அணியாகக் கடந்த 12 மாதங்களில் பட்ட கடினமான சூழல்களையும் கருத்தில் கொண்டு இதைச் சொல்கிறேன் என்றார். 

இது எனக்கு மிகவும் திருப்திகரமான வெற்றி. உலகக் கோப்பை 1983, உலக சாம்பியன்ஷிப் 1985 வெற்றிகளை விடவும் இது மேலானது என்றார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

இதுதவிர ஒருநாள் தொடரையும் 2-1 என வென்று முத்திரை பதித்தது இந்திய அணி. 

கோலியைக் கெளரவப்படுத்திய ஐசிசி

2018 ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​க​ளின் கேப்​ட​னாக விராட் கோலியின் பெயரைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது ஐசிசி. 

ஆண்​டு​தோ​றும் ஐசிசி சார்​பில் பல்​வேறு நாடு​க​ளின் சிறந்த வீரர்​களை கொண்ட டெஸ்ட் மற்​றும் ஒரு நாள் அணி​கள் அறி​விக்​கப்​ப​டு​வது வழக்​கம். அதே போல் 2018 ஆம் ஆண்​டுக்​கான அணி​களை அறி​வித்தது ஐசிசி. இவற்​றின் கேப்​ட​னாக கோலி நிய​மிக்​கப்​பட்டார். டெஸ்ட் அணியில் கோலி, ரிஷப் பந்த், பும்ரா ஆகியோரும் ஒருநாள் அணியில் கோலி, ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரும் இடம்பெற்றார்கள். 

நியூஸிலாந்தில் ஒருநாள் தொடரில் வெற்றி

வெற்றிகரமான ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சென்றது. அங்கு ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. எனினும் டி20 தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது. 

ஐபிஎல்-லில் சிஎஸ்கேவை வீழ்த்தி மீண்டும் சாதித்த மும்பை இந்தியன்ஸ் அணி!

ஐபிஎல் 2019 இறுதி ஆட்டத்தில் சென்னையை 1 ரன்னில் வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. பரபரப்பான கடைசி ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்து தோல்வியைத் தழுவியது சென்னை. 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மலிங்கா வீசிய பந்தில் தாகுர் எல்பிடபிள்யு ஆகி அவுட்டானார். இதன் மூலம் மும்பை அணி, 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ. 12.5 கோடி பரிசளிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஹைதராபாத், தில்லி அணிகளுக்கு தலா ரூ. 8.75 கோடி பரிசளிக்கப்பட்டது.

உலகக் கோப்பை: அரையிறுதி வரை நுழைந்த இந்திய அணி!

இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வீழ்ந்தது. 

உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி ஆட்டத்துடன் இந்தியா வெளியேறியது குறித்து தனது சுட்டுரையில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "ஏமாற்றமளிக்கும் முடிவு; எனினும், இந்தியா அணி இறுதி வரை முயன்றது. உலகக் கோப்பை போட்டி முழுவதுமாகவே இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாகச் செயல்பட்டது. அதற்காக பெருமை கொள்கிறோம். வெற்றி-தோல்வி வாழ்வின் அங்கம். இந்திய அணியின் எதிர்கால போட்டிகளுக்காக வாழ்த்துகள்' என்று கூறினார். 

ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்த சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. கடைசியில், 2019 உலகக் கோப்யை இங்கிலாந்து அணி வென்றது.

ஆறுதல் அளித்த மேற்கிந்தியத் தீவுகள் தொடர்!

உலகக் கோப்பை தோல்வியில் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் தொடர் சற்று ஆறுதல் அளித்தது.

டி20 தொடரை 3-0 என வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-0 என வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் தொடராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்று 120 புள்ளிகளை அள்ளியது இந்திய அணி. 

தென் ஆப்பிரிக்காவை 3-0 என வீழ்த்திய இந்திய அணி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என வென்று 180 புள்ளிகளை அலேக்காக அள்ளியது இந்திய அணி. 

இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் சர்மா, 3 டெஸ்டுகளில் 529 ரன்கள் எடுத்தார். ஒரு இரட்டைச் சதம் உள்ளிட்ட 3 சதங்கள் எடுத்தார். இந்தத் தொடரில் மயங்க் அகர்வால் (215 ரன்கள்), கோலி (254 ரன்கள்) ஆகியோரும் இரட்டைச் சதங்கள் எடுத்து அசத்தினார்கள். 

வங்கதேசத்தைப் புரட்டிய இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்குப் பிறகு வங்கதேச அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 எனவும் டி20 தொடரை 2-1 எனவும் இந்திய அணி வென்றது. 

டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வால் இரட்டைச் சதமெடுத்தார். 

இந்தியாவில் முதல் பகலிரவு டெஸ்ட்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி சமீபத்தில் பங்கேற்றுள்ளது. 

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கங்குலி, டெண்டுல்கர், டிராவிட், லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங், அகர்கர் என பிரபலங்கள் முதல் நாள் ஆட்டத்தில் பங்கேற்றார்கள். முதல் நாளன்று வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரிடம் இரு அணி வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். ராணுவ பேண்ட் வீரா்களால் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின், கங்குலி, லக்‌ஷ்மண், டிராவிட், கும்ப்ளே ஆகியோர் 2001 கொல்கத்தா டெஸ்ட் குறித்து தங்களுடைய நினைவுகளைக் கூறினார்கள்.

இதையடுத்து இந்தியாவில் இனி நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இதர மைதானங்களிலும் பகலிரவு டெஸ்ட் நடத்தப்படும். வெறும் ஐந்தாயிரம் ரசிகர்கள் முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட யாரும் தயாராக இல்லை என்றார் கங்குலி. 

மீண்டும் மே.இ. தீவுகளுக்கு எதிராக வெற்றி!

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி மீண்டும் விளையாடியது. டி20 தொடரை இந்திய அணி 2-1 எனவும் ஒருநாள் தொடரை 2-1 எனவும் வென்றது. 

ஐசிசி தரவரிசை: அழகான முடிவு

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்துடன் 2019-ஐ நிறைவு செய்துள்ளாா். 

இந்திய கிரிக்கெட் அணி ஏற்கெனவே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 928 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளாா். ஆஸி. மூத்த வீரா் ஸ்டீவ் ஸ்மித் அவரை காட்டிலும் 17 புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளாா். நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்ஸன் 864 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளாா்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. ஆஸ்திரேலியா 216, பாகிஸ்தான் 80. இலங்கை 80. நியூஸி. 60, இங்கிலாந்து 56 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அசத்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்

இந்த வருடம் இந்திய கிரிக்கெட்டின் சிறப்பு அம்சம் என்னவென்றால் வேகப்பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது தான். எந்த அணிக்கு எதிராகவும், எந்த இடத்திலும் பந்துவீசம் திறனுள்ள வேகப்பந்து வீச்சாளா்கள் நம்மிடம் உள்ளனா். சுழற்பந்து வீச்சாா்கள் மீதான பாா்வையை அவா்கள் தங்கள் பக்கம் திருப்பி விட்டனா் என்று கூறியுள்ளார் கோலி.  அதேபோல பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் கூட்டணி இந்த வருடம் அசத்தி விட்டது.

இன்றைய தேதியில் உலகளவில் சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது என்று வெளிநாட்டு வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பாராட்டும் விதத்தில் அவர்களுடைய பங்களிப்பு உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்களைப் பின்னுக்குத் தள்ளினார்கள். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 12 விக்கெட்டுகளும் ஷமி 9 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.  

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அளித்த கெளரவம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரபூா்வ இணையதளம் சாா்பில் 10 ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கனவு அணிகள் தோ்வு செய்யப்பட்டன. 

இரு அணிகளின் கேப்டன்களாக இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். டெஸ்ட் அணிக்கு விராட் கோலியும் ஒருநாள் அணிக்கு தோனியும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஒருநாள் அணியில் தோனி, ரோஹித் சர்மா, கோலி ஆகிய மூன்று இந்திய வீரர்களும் டெஸ்ட் அணியில் கோலியும் இடம்பெற்றுள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதித்துள்ள வீரர்களைக் கெளரவப்படுத்தும் விதமாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த ஒருநாள் அணி: ரோஹித் சர்மா, ஆம்லா, விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷகிப் அல் ஹசன், ஜாஸ் பட்லர், தோனி (கேப்டன்), ரஷித் கான், ஸ்டார்க், டிரெண்ட் போல்ட், மலிங்கா.

கடந்த பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணி: அலாஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, டி வில்லியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஜேம்ஸ் ஆண்டர்சன். 

விராட் கோலியின் நம்ப முடியாத சாதனைகள்

2010 முதல் 2019 வரையிலான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிகழ்த்தாத சாதனைகளே இல்லை.

பத்து வருடங்களாக, ஒரு வீரர் எப்படித் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும்? அதிலும் கோலி, இந்திய அணியின் கேப்டனாக வேறு கூடுதல் பொறுப்புகளைச் சுமக்கிறார். இந்தப் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்:

இந்த தசாப்தத்தில் (2010-2019) ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 

- அதிக ஆட்டங்கள் (227) 
- அதிக ரன்கள் (11125)
- அதிக சதங்கள் (42) 
- அதிக அரை சதங்கள் (52) 
- அதிக ஆட்ட நாயகன் விருதுகள் (35)
- அதிக தொடர் நாயகன் விருதுகள் (7)
- அதிக பவுண்டரிகள் (1038) 

கடந்த பத்தாண்டுகளில், அதிக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய வீரர்கள் 

227 - விராட் கோலி
196 - தோனி
196 - மேத்யூஸ்
195 - இயன் மார்கன் 
180 - ரோஹித் சர்மா

கடந்த பத்தாண்டுகளில் அதிக ஒருநாள் ரன்கள் 

11125 - விராட் கோலி (சராசரி 60.79)
8249 - ரோஹித் சர்மா (53.56)
7265 - ஆம்லா (49.76)
6485 - டி வில்லியர்ஸ் (64.20)
6428 - ராஸ் டெய்லர் (54.01)

கடந்த பத்தாண்டுகளில், அதிக ஒருநாள் ஆட்ட நாயகன் விருதுகள் 

35 - விராட் கோலி
21 - மார்டின் கப்தில் 
20 - டி வில்லியர்ஸ்
20 - ரோஹித் சர்மா
19 - தில்ஷன்

கடந்த பத்தாண்டுகளில், அதிக ஒருநாள் தொடர் நாயகன் விருதுகள் 

7 - விராட் கோலி
6 - ஆம்லா
5 - ரோஹித் சர்மா, வில்லியம்சன்

கடந்த பத்தாண்டுகளில், அதிக கேட்சுகள் பிடித்த ஃபீல்டர்கள் 

117 - விராட் கோலி
87 - ராஸ் டெய்லர்
81 - டு பிளெஸ்ஸி
79 - மார்டின் கப்தில்
77 - ஆம்லா

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அதிக ஒருநாள் ரன்கள் குவித்தவர்கள்

1970 - 79: கிரேக் சேப்பல் (919 ரன்கள்)
1980 - 89: டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் (5892)
1990 - 99: சச்சின் டெண்டுல்கர் (8571)
2000 - 2009: ரிக்கி பாண்டிங் (9103)
2010 - 2019: விராட் கோலி (11125)

எங்கே தோனி?

கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். பிறகு நீண்டகாலமாக ஓய்வில் உள்ளார். அவர் எப்போது மீண்டும் விளையாட வருவார் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கடந்த 2019 உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னா், குறுகிய ஓவா் ஆட்டங்களில் இருந்து தோனி ஓய்வு பெறுவாா் என பல்வேறு தரப்பினா் கூறி வந்தனா். இளம் வீரா்களுக்கு அவா் வழிவிட வேண்டும் என ஒரு தரப்பும், ஓய்வு முடிவை தோனியே தான் எடுப்பாா் என மற்றொரு தரப்பும் கூறி வந்தன.

மும்பையில், நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம், சா்வதேச ஆட்டங்களில் பங்கேற்காமல் இடைவெளி விட்டுள்ளது மற்றும் ஓய்வு குறித்து செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு பதிலளித்த தோனி, ஜனவரி மாதம் வரை எதையும் என்னிடம் கேட்காதீா்கள், அதுவரை காத்திருங்கள் என்றாா்.

தோனியின் நிலை குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:

ஒவ்வொருவர் மனதிலும் உள்ள கேள்வி தோனியின் எதிர்காலம் குறித்து தான். அவர் அணியில் இடம் பெறுவாரா என்பது 2020 ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்தே அமையும். விக்கெட் கீப்பிங்கில் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறியலாம். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் போட்டியே பெரிய போட்டியாகும்.  அதுவரை காத்திருக்க வேண்டும் என்றார். 

நெ. 1 அஸ்வின்!

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின்.

ஐசிசி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது.

1. ஆர். அஸ்வின் - 564 விக்கெட்டுகள்
2. ஆண்டர்சன் - 535 விக்கெட்டுகள்
3. ஸ்டூவர்ட் பிராட் - 525 விக்கெட்டுகள்
4. டிம் செளதி - 472 விக்கெட்டுகள்
5. டிரெண்ட் போல்ட் - 458 விக்கெட்டுகள் 

பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி, அஸ்வினின் இந்தச் சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். என்ன ஒரு பங்களிப்பு. சிலசமயங்களில் இது கவனிக்கப்படுவதில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது. அபாரம் என்று கூறியுள்ளார்.

இது ரோஹித் சர்மா வருடம்

2019-ம் ஆண்டு இந்திய அணிக்கும் கோலிக்கும் மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுக்கும் அற்புதமாக அமைந்துவிட்டது.

இந்த வருடம் விளையாடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் 1490 ரன்கள் எடுத்து, 2019-ல் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா. 26 ஆட்டங்களில் 1377 ரன்கள் எடுத்த கோலிக்கு 2-ம் இடமும் 28 ஆட்டங்களில் 1345 ரன்கள் எடுத்த மே.இ. தீவுகளின் பூரான் 3-ம் இடமும் கிடைத்துள்ளன.

மேலும் தொடர்ச்சியாக 7-வது வருடமாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

2013: ரோஹித் சர்மா (209)
2014: ரோஹித் சர்மா (264)
2015: ரோஹித் சர்மா (150)
2016: ரோஹித் சர்மா (171*)
2017: ரோஹித் சர்மா (208*)
2018: ரோஹித் சர்மா (162)
2019: ரோஹித் சர்மா (159)

2019 உலகக் கோப்பைப் போட்டியில் 5 சதங்கள் அடித்து சாதனை நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. 2019-ல் மட்டுமல்ல, அடுத்த வருடமும் இதுபோல சிறப்பாக விளையாடுவேன் என்று அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com