இந்திய கிரிக்கெட்டை மாற்றிய தோனியின் துணிச்சலான ஐந்து முடிவுகள்!

இந்திய கிரிக்கெட்டை மாற்றிய தோனியின் துணிச்சலான ஐந்து முடிவுகள்!

ஒரு கேப்டனாக தோனி எடுத்த உறுதியான 5 முடிவுகளால் இந்திய அணி பெற்ற பலன்கள் நிறைய...

2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் - தோனி மட்டுமே.

ஒரு கேப்டனாக தோனி எடுத்த உறுதியான 5 முடிவுகளால் இந்திய அணி பெற்ற பலன்கள் நிறைய. அவற்றைப் பார்க்கலாம்.

ஜொகிந்தர் சர்மாவுக்கு வழங்கப்பட்ட கடைசி ஓவர்

மூத்த வீரர்கள் அணியில் இல்லை. ஒரு கேப்டனாக தோனிக்கு வழங்கப்பட்ட முதல் பெரிய பொறுப்பு. 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியபோது அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றி பெற 13 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஜொகிந்தர் சர்மாவைப் பந்துவீச அழைத்தார் தோனி.

35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த மிஸ்பா உல் ஹக், பேட்டிங் செய்து வந்தார். இதனால் நிலைமை மிகவும் பரபரப்பாக இருந்தது. அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தாலும் கடைசியில் ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மிஸ்பா. இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது.

ஒருநாள் ஆட்டத்தில் கங்குலி, டிராவிடை நீக்கியது!

ஒரு கேப்டனாக ஆரம்ப காலத்தில் மூத்த வீரர்களை நீக்குவது தொடர்பான பிரச்னைகளைச் சந்தித்தார் தோனி. 

ஆனால் சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், விராட் கோலி, ரோஹித் சர்மா, கம்பீர் போன்ற வீரர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளைத் தருவதற்காக சில துணிச்சலான முடிவுகளை எடுத்தார் தோனி.

ஆஸ்திரேலியாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்குபெற்ற முத்தரப்புப் போட்டிக்கு கங்குலியும் டிராவிடும் வேண்டாம் என்றார். ஃபீல்டிங் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போதைய பிசிசிஐ செயலாளர் நிரஞ்சன் ஷா கூறினார். 

தோனியின் முடிவு மிகச்சரியாக அமைந்து ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக முத்தரப்புப் போட்டியை வென்றது.

2011 உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கியது!

2011 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான இந்தியா உலக சாம்பியன் ஆனது.

275 ரன்கள் என்கிற இலக்கை இந்திய அணி அடைய முயன்றபோது ஆரம்பத்தில் சிறிது தடுமாறியது. சச்சின், சேவாக், கோலி ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு யுவ்ராஜ் சிங் தான் வழக்கம் போல களமிறங்குவார் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஆனால் இன்னமும் 161 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்கிற நிலையில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் தோனி. கம்பீருடன் அற்புதமாகக் கூட்டணி அமைத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தோனி எடுத்த 91 ரன்களை விடவும் கடைசியில் அவர் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை முடித்தது வரலாற்றுத் தருணமாகிவிட்டது.

2012/2013 சிபி சீரிஸ் போட்டியில் சச்சின்/சேவாக்/கம்பீரைச் சுழற்சி முறையில் பயன்படுத்தியது

இந்தக் காலக்கட்டத்தில் சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோரை எப்படிப் பயன்படுத்துவது என்கிற சிக்கலும் தோனிக்கு ஏற்பட்டது. 2012/2013 சிபி சீரிஸ் போட்டியில் மூவரையும் சுழற்சி முறையில் பயன்படுத்த எண்ணினார் தோனி. அந்த வருடப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறாமல் போனாலும் தேவை ஏற்பட்டால் தன்னால் எந்த ஒரு முடிவையும் துணிச்சலாக எடுக்க முடியும் என்பதை இன்னொருமுறை நிரூபித்தார் தோனி.

தொடக்க வீரராக ரோஹித் சர்மாவைக் களமிறக்கியது

2013-ம் வருடம் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று மேலும் தனக்குப் பெருமை தேடிக்கொண்டார் தோனி. அதற்கு முக்கியக் காரணம், அவர் எடுத்த முக்கிய முடிவு - ரோஹித் சர்மாவைத் தொடக்க வீரராகக் களமிறக்கியது.

பிர்மிங்ஹாமில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச்சுற்று மழை காரணமாக 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனான ஜடேஜாவும் தொடர் நாயகனாக ஷிகர் தவனும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன்மூலம் டி20, ஒருநாள் உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்கிற பெருமையை தோனி அடைந்தார். 

2007 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தாலும் ரோஹித் சர்மாவால் இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை அடைய முடியவில்லை. 2013-ல் ரோஹித் சர்மாவைத் தொடக்க வீரராகக் களமிறக்கினார் தோனி. இந்தக் கதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரோஹித் சர்மாவின் பல சாதனைகளுக்கும் முக்கிய காரணம், தோனி. அவரால்தான் தொடக்க வீரராகக் களமிறங்கி ரோஹித் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

2013 சாம்பியன்ஸ் டிராபியின்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களினால்தான் இந்திய அணியில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டது. அதுதான் முரளி விஜய்யை ஒருநாள் அணியிலிருந்து வெளியேற்றியது. ரோஹித் சர்மாவைத் தொடக்க வீரராகக் களமிறக்கியது. அன்று ஆரம்பித்தன ரோஹித்தின் வாணவேடிக்கைகள்.

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், இந்திய அணியின் முதல் தேர்வாக இருந்த தொடக்க வீரர்கள் - முரளி விஜய் & ஷிகர் தவன். இங்கிலாந்து கிளம்பும்முன்பு பேட்டியளித்த கேப்டன் தோனி, இவர்களிருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறக்கப்படுவார்கள் என்று கிட்டத்தட்ட நேரடியாகவே சொன்னார். இதனால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தொடக்க வீரர்களாக விஜய்யும் தவனும்தான் களமிறங்குவார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

அணியில் இடம்பெற்ற ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் அதற்குமுன்பு தொடக்க வீரர்களாக களமிறங்கியிருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபிக்குச் சிறப்புத் தொடக்க வீரர்களாகத் தேர்வானது விஜய்யும் தவனும் மட்டுமே. 

இரு பயிற்சி ஆட்டங்களிலும் விஜய்யும் தவனுமே தொடக்க வீரர்களாக அனுப்பப்பட்டார்கள். இலங்கைக்கு எதிராக 18 ரன்கள் எடுத்த விஜய், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் 1 ரன்னில் அவுட் ஆனார். தவனும் சிறப்பாக ஒன்றும் ஆடவில்லை. விஜய்க்குச் சமமாகவே குறைவான ரன்கள் எடுத்து அவரும் தடுமாறவே செய்தார்.

தோனி வசம் இருந்த திட்டங்கள் இதனால் மாற்றத்துக்கு ஆளாகின. இரு தொடக்க வீரர்களுமே பயிற்சி ஆட்டங்களில் சொதப்பியெடுத்து விட்டார்கள். இவர்களை நம்பி எப்படிப் பொறுப்பை ஒப்படைக்கமுடியும்? அதிலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஒவ்வொரு ஆட்டமே கிட்டத்தட்ட நாக்அவுட் போலதான். ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி சிக்கல் ஆகிவிடும். 

போட்டி தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஆட்டத்தில் டாஸில் தோற்ற தோனி இவ்வாறு சொன்னார்: அணியில் விஜய் இல்லை. (தவனுடன் இணைந்து) ரோஹித் சர்மா தொடக்க வீரராக ஆடுவார் என்றார்.

இந்திய ரசிகர்களுக்கு இது புதிய செய்தி. அதுவரை ரோஹித் சர்மா மீது யாருக்கும் பெரிய நம்பிக்கை கிடையாது. மறுபடியும் சொதப்புவாரோ என்றுதான் பலரும் பயந்தார்கள்.

ஆனால், ரோஹித் சர்மாவைத் தைரியமாகத் தொடக்க வீரராகக் களமிறக்கினார் தோனி. அவருடைய இந்தச் சமயோசிதமான முடிவுகள் இந்திய ஒருநாள் அணிக்கு மிகப்பெரிய மாற்றங்களையும் பலன்களையும் அளித்தன. சச்சின் தொடக்க வீரராகக் களமிறங்கி எப்படிப் பல சாதனைகள் படைத்தாரோ அதற்கு நிகரான திறமையையும் பங்களிப்பையும் அணிக்கு வழங்கி வருகிறார் ரோஹித் சர்மா. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் யாருமே எதிர்பார்க்காத விதத்தில் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் தவனும் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் பொறுமையாக ரன்கள் சேர்த்தார்கள். முதல் 5 ஓவர்களில் 15 ரன்கள்தான். ஆனால் போகப்போக தெ.ஆ. பந்துவீச்சாளர்களைக் கடுப்பேற்றினார்கள். 21 ஓவர்கள், 127 ரன்களுக்குப் பிறகுதான் இந்த ஜோடியைப் பிரிக்கமுடிந்தது. இந்தியா 331 ரன்கள் குவித்து அந்த ஆட்டத்தில் வெற்றி பெற இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளம் முக்கியக் காரணமாக அமைந்தது. 

அந்தப் போட்டி முழுக்க ரோஹித்தும் தவனும் நம்பவேமுடியாத அளவுக்குப் பிரமாதமாக விளையாடி இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்குப் பெரிதும் உதவினார்கள். ஷேவாக் - கம்பீருக்குப் பிறகு இந்திய அணி தேடிக்கொண்டிருந்த தொடக்க வீரர்கள் இவர்கள்தான் என்பது அப்போட்டியில் உறுதியானது. அந்தப் போட்டியில் 363 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் போட்டி நாயகன் என்கிற பெருமைகளைப் பெற்றார் தவன். 5 ஆட்டங்களில் 177 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, அதில் இரு அரை சதங்கள் எடுத்து அணியின் முழு நம்பிக்கையையும் பெற்றார்.

கிடைத்த வாய்ப்பை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் ரோஹித் சர்மா. பல சாதனைகளைப் படைத்தார். ஒவ்வொரு ஐசிசி போட்டியிலும் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி நிறைய ரன்கள் எடுத்தார். 

இப்போது ஒருநாள் போட்டியில் 3 இரட்டைச் சதங்கள் எடுத்து தன்னிகரற்ற வீரராக உள்ளார் ரோஹித் சர்மா. அத்தனைக்கும் காரணம் - தோனி எடுத்த அந்தத் துணிச்சலான முடிவு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com