11 முறை தோற்ற சீன வீராங்கனையிடம் வெற்றி பெற்று சாதனை படைத்த பவினா படேல்

வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன்.
11 முறை தோற்ற சீன வீராங்கனையிடம் வெற்றி பெற்று சாதனை படைத்த பவினா படேல்

இதற்கு முன்பு 11 முறை தோற்ற சீன வீராங்கனையுடனான 12-வது மோதலில் வெற்றி பெற்று பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினா படேல். 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினா படேல். இதன் மூலம் இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் சீனாவின் மியோ ஸாங்கை எதிா்கொண்டார் பவினா படேல். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்கிற கேம் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த பவினா படேல். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் நடைபெற்றது. 

முதல்முறையாக பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள பவினா படேல், தங்கம் வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் தங்கம் வென்றால் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற சாதனையை அவர் படைப்பார். பாராலிம்பிக் போட்டியின் வரலாற்றில் இந்தியா இதுவரை மூன்று தங்கப் பதக்கங்களையே வென்றுள்ளது. இந்திய வீராங்கனைகளில் தீபா மாலிக் மட்டுமே பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் (வெள்ளி) வென்றுள்ளார்.  

பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை என்ற சிறப்பை நேற்று பெற்ற பவினா படேல் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. 

இந்நிலையில் பவினா படேல் இன்று வீழ்த்திய மியா ஸாங், முதல்முறையாக இந்திய வீராங்கனையிடம் தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் போட்டியிட்ட 11 ஆட்டங்களிலும் சீன வீராங்கனைக்கே வெற்றி கிடைத்துள்ளது. 

உலகின் 3-ம் நிலை வீரரான மியா ஸாங், உலகின் 12-ம் நிலை வீராங்கனையான பவினா படேலை இதற்கு முன்பு தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் தோற்கடித்ததால் இன்று மியாவின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல முதல் கேமையும் சீன வீராங்கனையே வென்றார். ஆனால் அடுத்த இரு கேம்களையும் தனதாக்கிக்கொண்டார் பவினா படேல். இந்த திருப்பத்தை சீன வீராங்கனை எதிர்பார்க்கவில்லை. அடுத்த கேமை 11-9 எனப் போராடி வென்றார். இதனால் இறுதி கேமில் யார் வெல்வார் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. 5-0 என முன்னிலை வகித்தார் பவினா. இதற்குப் பிறகு மியா போராடினார். 9-8 என்கிற நிலைமைக்குச் சென்றது. இந்திய ரசிகர்கள் பரபரப்பானார்கள். எனினும் அடுத்த இரு புள்ளிகளையும் வென்று சாதனை வெற்றியை அடைந்தார் பவினா. 

12-ம் நிலை வீராங்கனையான பவினா, குரூப் ஏ பிரிவில் உலகின் நெ.9 வீராங்கனையை முதலில் தோற்கடித்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நெ. 8 வீராங்கனையைத் தோற்கடித்தவர், காலிறுதியில் ரியோ போட்டியில் தங்கம் வென்ற உலகின் நெ.2 வீராங்கனையை வென்று அசத்தினார். இப்போது தன்னை 11 முறை தோற்கடித்த மியோவைத் தோற்கடித்து சாதனை வெற்றியை அடைந்துள்ளார். இருவருக்கும் இடையிலான 11 ஆட்டங்களிலும் விளையாடிய 39 கேம்களில் ஆறு கேம்களை மட்டுமே பவினா வென்றுள்ளார். இதனால் ஒவ்வொரு முறையும் பவினாவை எளிதாக வீழ்த்திய மியோ, பாராலிம்பிக்ஸ் போட்டியில் அவரிடம் தோற்றுவிட்டார். 

சீனாவுக்கு எதிராக வெல்வது கடினம் என்பார்கள். ஆனால் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளேன். இதேபோல விளையாடினால் என்னால் தங்கம் வெல்ல முடியும் என்கிறார் பவினா படேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com